'ஹஸன்'
(சரித்திர ஆசிரியர்
செய்யதுனா முஸ்லிம் முரசு மாத இதழில் எழுதிய தொடர்)
"நீங்கள் கடிதம் எழுதியிருக்கப்
படாது!" என்றார்கள் காயிதேமில்லத். அழுத்தம் திருத்தமாக!
திகைத்துப் போய் அவர்களின் முகத்தையே பார்த்துக்
கொண்டிருந்தேன்.
"பெரிய முதலாளி (மு.ந. அப்துர்ரஹ்மான்
சாஹிப்) அவர்களுக்கு நான் முறைப்படி கடிதம் எழுதி, அவர்கள் மகன் ரிபாயியை சமுதாயப்
பணிக்காக, பத்திரிகை ஆசிரியர் பதவியை ஏற்று நடத்துவதற்காக, சென்னைக்கு அனுப்பி
வைக்கும்படி கோர வேண்டும். அதை அவர்கள் ஏற்றுக் கொண்டால் அவர்கள் ரிபாயிக்கு
உத்தரவிட வேண்டும் அதுதான் முறை!" என்றார்கள்.
விஷயம் புரிந்ததும், என் அவசர புத்திக்காக
அவர்களிடம் மன்னிப்புக் கேட்டுக் கொண்டேன்.
"கைர். பரவாயில்லை. எதோ நடக்க
வேண்டியிருந்தது நடந்துவிட்டது. உங்களின் அளவு கடந்த ஆர்வம எனக்கு நன்றாகத்
தெரியும். அதனால் அவசரப்பட்டு விட்டீர்கள். இனி நடக்க வேண்டியதைப் பார்ப்போம்.
அபூதாலிப், மகனி இருவரையும் அழைத்து வாருங்கள். பத்திரிக்கையின் பெயரை முடிவு செய்யவேண்டும்.
பத்திரிக்கையை நாமே கம்போஸ் செய்ய வேண்டும். வெளி அச்சகத்தில் பிரிண்ட் செய்துக்
கொள்ளலாம்.கம்போசிங் செய்ய வேண்டிய அச்செழுத்துக்களை வாங்கி விடுவோம்!"
என்றார்கள்.
அதைத் தொடர்ந்து சுறுசுறுப்பாகச்
செயல்பட்டோம். பத்திரிக்கையின் பெயர்த் தேர்வு சுலபமானதாக இல்லை. கடைசியில்
காயிதேமில்லத் அவர்களே, "உரிமைக் குரல்" என்ற பெயரைக் கூறி இதற்கு மேல்
விவாதம் வேண்டாம், இதுவே உறுதியாக இருக்கட்டும் என்றார்கள்.
அனைத்து ஏற்பாடுகளும் செய்யப் பெற்று உரிமைக்
குரலின் முதல் இதழ் 11.12.1961 - ல் வெளிவந்தது.
சென்னை மண்ணடி வெங்கட மேஸ்திரி தெரு எண் 19
கட்டிடத்தில் பத்திரிகை அலுவலகம் அமைந்தது.
பெரிய முதலாளி அவர்கள், தம மகன் ஏ.கே. ரிபாயி
அவர்களை கடுமையான நிபந்தனைகளுடன் சென்னைக்கு அனுப்பி வைத்தார்கள். அவை
என்னவென்றால், பத்திரிகையாசிரியர் வேலைக்காக ஒரு பைசா கூட சம்பளம் வாங்கக் கூடாது.
வீடு பிடிக்கவும், குடும்பம் நடத்தவும் மற்ற எந்தச் செலவுக்காகவும் பத்திரிக்கையிலிருந்து
பணம் பெறக் கூடாது. தேவைப்படும் பணம் அனைத்தையும் அவர்களே ஊரிலிருந்து தம்
மகனுக்கு அனுப்புவார்கள். இந்த
நிபந்தனைகளை பத்திரிகை ஆசிரியராக இருந்த காலம் முழுதுவம் அப்படியே கடைப்
பிடித்தார், ரிபாயி சாஹிப்.
சைதாப்பேட்டையில் ஒரு பெரிய வீடு எடுத்துக்
கொண்டு 36 ஆண்டுகளுக்கு (எழுதப்பட்ட ஆண்டு 1998) முன்பே மாதந்தோறும் ஆயிரக் கணக்கில் செலவு
செய்து கொண்டிருந்தார். இன்றைய நிலையில் அத் தொகையை ஒன்றுக்குப் பத்தாகப்
பெருக்கிப் பார்க்க வேண்டும்.
உரிமைக் குரல் 1961 இறுதியில்
ஆரம்பிக்கப்பட்ட உடனேயே அடுத்து 1962 க்கான பொதுத் தேர்தலும் வந்து சேர்ந்தது. தி.மு.க.,
முஸ்லிம் லீக் ஆகிய இரு கட்சிகளும் கூட்டு சேர்ந்தன. காயிதேமில்லத், அண்ணா ஆகிய
இரு பெருந்தலைவர்களும் பிரச்சாரத்தில் ஈடுபட்டனர். தஞ்சை மாவட்டத்தில்
காயிதேமில்லத் அவர்கள் தேர்தல் பிரச்சாரம் செய்யச் சென்ற போது "உரிமைக்
குரல்" நிருபராக, நானும் உடன் பிரயாணம் செய்து, உரிமைக் குரலுக்கு கட்டுரைகள்
அனுப்பிக் கொண்டிருந்தேன்.
பார்லிமென்ட்டிற்கு ஏ.கே.ஏ. அப்துல் ஸமது
சாகிப் வட சென்னை தொகுதியிலும், நாவலர் திருப்பூர் மொய்தீன் நாகை பாராளுமன்றத்
தொகுதியிலும் சாரண பாஸ்கரன் நாகை சட்ட மன்றத் தொகுதியிலும், ரிபாயி சாகிப்
தென்காசி சட்டமன்றத் தொகுதியிலும் நிறுத்தப்பட்டனர். ஆனால், இவர்கள் யாருமே வெற்றி
பெறவில்லை.
தேர்தல் வேலையைப் பார்க்கச் சென்ற ரிபாயி
சாஹிப் தேர்தலுக்குப் பின் ஊரில் ஏற்பட்ட
பிரச்சனைகளை கவனிப்பதற்காக நீண்ட காலம் ஊரிலேயே தங்கி விட்டார்.
எனவே "உரிமைக் குரல்" ஆசிரியர்
பொறுப்பை நானே ஏற்று நடத்த வேண்டியிருந்தது. மற்ற நண்பர்களும் உதவி வந்தார்கள்.
1963 ம் ஆண்டின் முதல் அரையாண்டு காலம் நான்
மதுரைக்கு பணிமாற்றலாகச் சென்றிருந்தேன். அப்போது ரிபாயி சாஹிப் அவர்களே
ஊரிலிருந்து திரும்பி வந்து பத்திரிக்கையை கவனித்து வந்தார். அதே ஆண்டு ஜூன் மாதம்
சென்னைக்கு மீண்டும் மாற்றலாகி வந்தேன். அது முதல் அக்டோபர் 1966ல் முஸ்லிம் முரசு நிறுவனர் எஸ்.
அப்துர் ரஹீம் காலமாகும் வரை உரிமைக் குரல் ஆசிரியர் குழுவில் முக்கியப் பங்கு
வகித்தேன். காயல்பட்டணம் எம். கே.எஸ். முஹ்யித்தீன் (காக்கா) பி.ஏ.பி.எல்.
அவர்களோடும் ரிபாயி சாஹிப் அவர்களோடும் மற்ற நண்பர்கள் சிலரோடும் உரிமைக் குரல்
அலுவலகத்தில் நாங்கள் கழித்த நாட்கள் வாழ்நாளில் மறக்க முடியாதவை. அருமையான
அரசியல் பயிற்சிப் பாசறையாகவே அது விளங்கிற்று. உரிமைக் குரல் மிக உயர்ந்த தரமுள்ள ஏடாக வெளி வந்துக்
கொண்டிருந்தது. முக்கியமான சில சந்தர்ப்பங்களில் காயிதேமில்லத் அவர்களே தலையங்கம்
தீட்டுவார்கள். அவற்றை அவர்களின் கையெழுத்தோடு வெளியிடுவோம்.
1966 அக்டோபரில் முரசு நிறுவனர் அப்துர்
ரஹீம் அவர்கள் மறைந்தவுடன் அதன் ஆசிரியர் பொறுப்பு ஏன் மீது சுமத்தப்பட்டதால் நான்
உரிமைக் குரல் அலுவலகம் செல்வது மிகவும் குறைந்து வந்து, சில மாதங்களுக்குப் பிறகு
அடியோடு நின்றது. அது பற்றி காயிதேமில்லத்
அவர்களிடம் அபூதாலிப் அண்ணன் குறைச் செல்ல சென்றார். காயிதேமில்லத் அவர்கள் அவரிடம் கூறிய பதில்
"முஸ்லிம் முரசும் நமது பத்திரிகைதான். அது நம்முடைய ஆள் ஒருவரின் பொறுப்பில்
வெளிவருவது நல்லது தானே" என்பது!
அதற்கு முன்பாக "உரிமைக் குரல்"
அலுவலகத்தில் பத்திரிக்கையின் சிறப்பு கருதி நாங்கள் செயல்பட்ட விதத்தையும் இங்கு
சொல்லி வைப்பது இத்துறையில் ஈடுபடுபவோருக்கு பயனுள்ள குறிப்பாக அமையும்.
"உரிமைக் குரல்" இந்தியன் யூனியன்
முஸ்லிம் லீகின் தலைமையகத்திலிருந்து காயிதேமில்லத் அவர்களின் மேற் பார்வையின்
கீழ் வெளியிடப் பெரும் அதிகாரப் பூர்வமான கட்சி வெளியீடாகையால் அதன் தரமும்
உயர்வாக இருக்க வேண்டும். அகில இந்திய அரசியலை முஸ்லிம் லீகின் பார்வையில் அலசக்கூடியதாகவும்
இருக்க வேண்டும் என நினைத்தோம்.
அதற்காக, தமிழக ஆங்கில, தமிழ் ஏடுகள்
மட்டுமின்றி டில்லியிலிருந்து "ஹிந்துஸ்தான் டைம்ஸ்",
கல்கத்தாவிலிருந்து "ஸ்டேட்ஸ்மேன்", பம்பாயிலிருந்து "டைம்ஸ் ஆப்
இந்தியா", பெங்களூரிலிருந்து "டெக்கான் ஹெரால்ட்" ஆகிய தினசரி
ஆங்கிலப் பத்திரிக்கைகளையும் மற்றும் வாரப் பத்திரிக்கைகளையும் நிறையப் படிப்போம்.
முஸ்லிம் உலக செய்திகளுக்காக டில்லியிலிருந்து "தஆவத்" உர்தூ
தினசரியையும் ஏர்மெயில் மூலம் மறுநாளே கிடைக்க ஏற்பாடு செய்தோம். மேலும்
ஆர்.எஸ்.எஸ். வார ஏடான "ஆர்கனைஸர்" பத்திரிக்கையும் படிப்போம். அதில்
வரும் பொய்களும் துவேஷக் கட்டுரைகளும் எங்களுடைய எழுத்துக்களுக்கு சூடேற்றி
விறுவிறுப்பை கொடுக்கும். இப்படியாக "உரிமைக் குரலுக்கு நிகர் உரிமைக்
குரல்தான்" என்று வாசகர்கள் எண்ணும்படி பத்திரிகை வெளி வந்துக்
கொண்டிருந்தது. உரிமைக் குரல் குழுவினர் கூடி விவாதித்தப் பின்னரே அந்த வாரத்
தலையங்கம் எழுதப்படும். தேவைப்படும் போதெல்லாம் காயிதேமில்லத் அவர்களிடமும் போன்
மூலம் கருத்து கேட்டுக் கொள்வோம்.
உர்தூவிலும் ஒரு பத்திரிகை தொடங்கி சிறிது
காலம் சென்றவுடன் இ.யூ.மு.லீக் சார்பில் வரவேண்டும் என்னும் நியாயமான கோரிக்கை
எழுந்தது. அதன் பலனாக "நுஸ்ரத்" எனும் பெயரில் உர்தூ வார எடும் தொடங்கப்
பெற்றது. எனினும் அது சரிவர வெளிவரவில்லை.
1967 பிப்ரவரியில் நடைபெற வேண்டிய பொதுத்
தேர்தலுக்கான அறிவிப்பு வெளிவந்தது.
அண்ணா தலைமையில், தி.மு.க. வும் முஸ்லிம்
லீகும் ராஜாஜியின் சுதந்திரக் கட்சியும் இணைந்து போட்டியிட்டன. அசைக்க முடியாதெனக்
கருதப்பட்டு வந்த காங்கிரஸ் ஆட்சி வீழ்த்தப்பட்டது. அண்ணா முதல் மந்திரியானார்.
முஸ்லிம் லீக் பிரதிநிதிகளாக மூன்று பேர் எம்.எல்.ஏ.க்களாகத் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
இந்தத் தடவை ரிபாயி சாஹிப் தேர்தலில் நிற்கவில்லை.
அடுத்த ஆண்டான 1968 ஜனவரியி இரண்டாவது உலகத் தமிழ் மாநாடு
சென்னையில் நடைபெறுமென அறிவிக்கப்பட்டது. அதையொட்டி சென்னைக் கடற்கரைச் சாலையில்
புகழ்பெற்ற தமிழ்ப் புலவர்கள் பலருக்குச் சிலை நிறுவ ஏற்பாடாயிற்று.
கே.பி. செய்குத்தம்பி முதலான நண்பர்கள் பலர்
சந்தித்து முஸ்லிம் தமிழ் புலவர்களுக்கும் நினைவுச் சின்னம் நிறுவப்பட
வேண்டுமெனவும், நாம் சிலை வைக்கக் கூடாது, என்பதால் தூண் ஒன்று நாட்டி, அதில்
முஸ்லிம் புலவர்களுள் உமறுப்புலவர், புலவர் நாயகம், வண்ணக்களஞ்சியப் புலவர் போன்ற
மிகப் பெரிய புலவர்களின் பெயர்களையும், அவர்களைப் பற்றிய சிறு சிறு
குறிப்புகளையும் பொறிக்க வேண்டும், அதன் செலவை சமுதாயமே ஏற்றுக் கொள்ளும் என்றும்
தீர்மானம் நிறைவேற்றி வெளியூர் சென்றிருந்த அண்ணாவைச் சந்தித்தனர். அவர்
"சென்னைக்குப் போய் நாவலர் நெடுஞ்செழியனிடம் பேசுங்கள்" என்று
சொல்லிவிட்டார். குழுவுக்கு மேயர் ஹபிபுல்லா பேக் தலைவராக இருந்தார். குழுவினர்,
நாவலரைச் சந்தித்து, கோரிக்கையை முன்வைத்த போது, "இதை நான் அனுமதிக்க
மாட்டேன். மெரினாவை சமாதி கட்டும் கல்லறையாக மாற்ற உடன்பட முடியாது!" என்று
முகத்தில் அறைந்தார் போல் பதில் சொல்லி விட்டார்.
அப்படிச் சொன்னவர், அடுத்த ஆண்டிலேயே அவர்
தற்காலிக முதலமைச்சராக இருக்கும்போது ஒரு சமாதியையும், மேலும் பல ஆண்டுகளுக்குப்
பிறகு அதே நிலையில் மற்றொரு சமாதியையும் அமைக்க அவர் கையாலேயே உத்தரவு பிறப்பிக்கும்
படியும் ஆயிற்று.
நன்றி: முஸ்லிம்
முரசு.