Wednesday, July 24, 2013

அற்புத சாதனையாளர் அ. க. ரிபாயி சில நினைவுகள்!!!

அற்புத சாதனையாளர் அ. க. ரிபாயி சில நினைவுகள்.


1974 ஏப்ரல் மாதத்தில் ரிபாயி சாஹிப் ராஜ்ய சபை உறுப்பினராகப் பதவி ஏற்றார்.

ரிபாயி சாஹிப் ஒரு பெரிய பேச்சாளர் என்று பெயரெடுக்க வில்லை. ஆகையால் அவர் பாராளுமன்ற விவாதங்களில் அதிகம் பங்கெடுப்பதில்லை. எனினும் கேள்விகள் கேட்பதன் மூலமும் கடிதங்கள் எழுதுவதன் மூலமும் தம் பதவியை நன்கு பயன்படுத்தி சமுதாயத்திற்கு நல்ல முறையில் பணியாற்றி வந்தார்.

அன்றியும் வேறெந்த எம். பி. யும் செய்ய நினைக்காத அரிய பணி ஒன்றையும் அவர் தமது பதவிக் காலத்தில் நிறைவேற்றி வந்தார்.

இந்தியாவிலேயே மிகச் சிறந்து விளங்கும் நூல் நிலையங்களில் ஒன்று 'பார்லிமெண்ட் லைப்ரரி'. அவர் புது டில்லியில் தங்கும் காலங்களில் பாதிநேரம் அந்த நூல் நிலையத்தில்தான் இருப்பார். அவர் அங்கு அப்படி என்னதான் செய்து கொண்டிருந்தார் என்பதைப் பிறகு பார்ப்போம்.

எம்.பி.யாக இருந்த காலத்தில் அவர் சென்னை இராயப்பேட்டையில் உள்ள லாய்ட்ஸ் காலனியில் ஒரு வீட்டில் தங்கி இருந்தார். நண்பர்களுக்கு அடிக்கடி அழைப்புக் கொடுத்து சமுதாயப் பிரச்சனைகளை விவாதிப்பார்.

அப்படிப்பட்ட சந்திப்பின்போது பலமுறை என்னை டில்லிக்கு தம்முடைய விருந்தினராக வரும் படி அழைத்து வந்தார்.

இறுதியாக 1976 மார்ச்சில் அவருடைய அழைப்பை ஏற்று அவருடன் டில்லி செல்லத் துணிந்தேன்.

காயிதே மில்லத் அவர்கள் லோக் சபா உறுப்பினராக ஏறத்தாழ பத்து ஆண்டுகள் இருந்தபோது அவர்களுக்கு வெஸ்ட்டர்ன் கோர்ட் என்னும் மாளிகையில் ஐந்தாம் நம்பர் விடுதி ஒதுக்கப்பட்டிருந்தது. அவர்களின் மறைவும் ரிபாயி சாஹிபின் பதவி ஏற்பும் ஒரே மாதத்தில் நிகழ்ந்ததால் அதே விடுதியை தமக்குத் தரும்படி ரிபாயி சாஹிப் கேட்டுப் பெறுவதற்கு எளிதாயிற்று. அப்படிக் கிடைத்ததில் முஸ்லிம் லீகினருக்கு ஏற்பட்ட மகிழ்ச்சி அளவிடற்கரிதாக இருந்தது. இ. யூ. முஸ்லிம் லீகின் வரலாற்றில் அதற்கு அவ்வளவு முக்கியத்துவம் ஏற்பட்டிருப்பதை  யாரும்  மறுக்க இயலாது.

காயிதே மில்லத் அவர்கள் பல்லாண்டு காலம் தங்கியிருந்த இடத்தில் ரிபாயி சாஹிபின் விருந்தினனாக நான் போய் இருந்தது எனக்குப் பெருமையையும் பெருமகிழ்ச்சியையும் அளித்தது.

விருந்தோம்பலில் ரிபாயி சாஹிபுக்கு நிகர் அவரேதான். எனக்கு எந்தவிதமான வசதிக் குறைவும் ஏற்படாதபடி நன்கு கவனித்துக் கொண்டார்.

அதோடு நான் டில்லியை நன்கு சுற்றிப் பார்க்க எல்லா ஏற்பாடுகளையும் செய்தார். டில்லியில் அப்போது பணியாற்றிக் கொண்டிருந்த நாகூரைச் சேர்ந்த தொலைத் தொடர்புத்துறை அதிகாரியான என் நண்பன் ராமலிங்கமும் அவ்வகையில் எனக்கு உதவினார். ரிபாயி சாஹிபின் உறவினரும் திருச்சி ஜமால் முஹம்மது கல்லூரியின் இப்போதைய தாளாளருமான ஜனாப் அப்துல் கபூர் என்னை தமது ஸ்கூட்டரின் பின்னால் அமர்த்தி டில்லியை நன்றாக சுற்றிக் காட்டினார். நகர சுற்றுலாப் பேருந்திலும் நானே சென்று சுற்றிப் பார்த்தேன். தாஜ்மஹால் பார்க்க நான் தனியே ஆக்ரா சென்று திரும்பினேன்.

வரலாற்று முக்கியம் வாய்ந்த டில்லி வலிமார்களின் அடக்கத் தலங்களுக்கும் நினைவுச் சின்னங்களுக்கும் ரிபாயி சாஹிப் அழைத்துச் சென்றார். அதற்கெல்லாம் சிகரம் வைத்தாற்போல, ஒரு நாள் டில்லி முஸ்லிம் பத்திரிகையாளர் ஒருவரையும் அழைத்துக் கொண்டு என்னைப் பஞ்சாப் மாநிலம் அழைத்துப் போனார்.

முஜத்தித் அல் பு தானி [12-ம் ஹிஜ்ரி நூற்றாண்டின் சீர்திருத்தவாதி] என்னும் சிறப்புப் பெயரோடு புகழ்பெற்று விளங்கும் செய்கு அஹ்மது ஸர்ஹிந்தீ என்னும் பெரியார் பஞ்சாபின் இருதயம் போன்று விளங்கும் பகுதியிலுள்ள ஸர்ஹிந்த் என்னும் நகரில் அடங்கியுள்ளார்கள்.

சக்ரவர்த்தி அக்பரின் இறுதிக் காலத்திலும் அவர் மகன் ஜஹாங்கீரின் ஆட்சியிலும் அப்பெரியார் வாழ்ந்தார்கள். அம்மன்னர்களின் தவறான போக்குகளைச் சாடி அவர்களுக்கு எழுதிய கடிதங்கள் இஸ்லாமிய உலகு முழுவதும் இன்றும் புகழ்பெற்று விளங்குகின்றன. பல மொழிகளிலும் பெயர்க்கப் பட்டுள்ளன அப்பெரியார் பற்றி நானும் படித்திருந்தேன். ஆகையால் அவர்களுடைய ஜியாரத்திற்குப் போவதை எனக்கு கிடைத்த அரிய வாய்ப்பாக ஏற்றுச் சென்றேன்.

ஸர்ஹிந்தில் ஒரு பெரிய தோட்டத்தில் அமைந்துள்ள தர்காவும் அதன் அருகில் உள்ள மஸ்ஜிதும் சுமாரான நிலையில் பராமரிக்கப் படுகின்றன. தர்கா பகுதியில் 2 3 முஸ்லிம் குடும்பங்கள் மட்டுமே வாழ்கின்றன. அவர்கள் தர்காப் பணிகளை கவனிப்பவர்கள். தொலை தூரங்களில் இருந்து ஜியாரத்திற்காக முஸ்லிம்கள் வந்து போய்க் கொண்டிருந்தாலும் அவ்வூரில் வேறு முஸ்லிம் குடும்பங்கள் இல்லை. முழுக்க முழுக்க சீக்கியர்கள் நிறைந்த ஊர் அது.


அங்கிருந்து 15 கிலோ மீட்டர் தொலைவில் ''மாலோ கோட்லா'' என்றொரு சமஸ்தானம் உண்டு அதன் நவாபின் நிர்வாகத்தில்தான் தர்கா இருக்கிறது. முஸ்லிம்களும் ஓரளவு அங்கு வாழ்கின்றனர். போதுமான முஸ்லிம்கள் தர்கா பகுதியில் இல்லாது இருந்தாலும்  அங்கு ''ஜும்ஆ'' த் தொழுகையை நிறைவேற்றி வருகிறார்கள்.


ஸர்ஹிந்தில் வாழும் சீக்கியர் பலர் தர்காவுக்கு வருகிறார்கள். நாங்கள் சென்றிருந்த போது சில சீக்கியர்கள் ''முஜத்தித்'' அவர்களின் கப்ருக்கு அருகில் மணிக்கணக்கில் தியானத்தில் ஆழ்ந்திருந்தார்கள்.


டில்லியிலிருந்து இரவு ரயிலில் புறப்பட்டு மறுநாள் காலை ஸர்ஹிந்தி போய்ச் சேர்ந்த நாங்கள் அன்று பிற்பகல் விரைவுப் பேருந்தில் கிளம்பி டில்லி திரும்பினோம் வழியில் பானிபட் போன்ற சரித்திரப் பிரசித்தி பெற்ற பல ஊர்களைக் கடந்து வந்தோம். பஞ்சாப் மாநிலத்தின் செழிப்பையும் நன்கு காண முடிந்தது.


அதே போல டில்லியில்லிருந்து அஜ்மீர் சென்று திரும்பவும் ரிபாயிசாஹிப் ரயில் பயணத்திற்கு முன்னேற்பாடு செய்திருந்தார். பயணம் புறப்படும் நேரம், நான் கடுமையான காய்ச்சலால் பாதிக்கப்பட்டதால் நான் உடன் செல்ல முடியவில்லை. ரிபாயி சாஹிபும் இன்னொரு நண்பரும் புறப்பட்டு போய் அஜ்மீரில் ஒரு நாள் தங்கி விட்டு மறுநாள் திரும்பினர்.


1976 -ல் இந்திரா காந்தியின் எமர்ஜன்சி ஆட்சி நடந்து கொண்டிருந்தது. அதனால் இடையிடையே சில கட்டுப்பாடுகளை எதிர்கொள்ள வேண்டி வந்தது.


அப்போது குடியரசுத் தலைவராக இருந்தவர் பக்ருத்தீன் அலி அஹ்மது அவர்கள்.

அவருடைய ''பிரஸ் செக்ரட்டரி ''யாக இருந்தவர் கோவையைச் சேர்ந்த ஜனாப் அப்துல் ஹமித். அவர் சென்னையில் சில ஆண்டுகள் ''ஹிந்து'' நாளேட்டின் துணை ஆசிரியராகவும் பணியாற்றியிருகிறார். அப்போது அவருடன் எனக்கும் பரிச்சயம் இருந்தது.


ஜனாதிபதியிடம் என்னை அழைத்துப் போய் அறிமுகப்படுத்த ரிபாயி சாஹிப் விரும்பினார். ஜனாப் அப்துஸ்ஸமது சாஹிப் அவர்களின் பதவிக் காலமும் முடிவடைவதாக இருந்த நேரம். அவர் குடியரசுத் தலைவரிடம் விடை பெறுவதற்கும் சேர்ந்து சந்திப்பதிற்கு ஜனாப் அப்துல் ஹமீது மூலம் தேதியும் நேரமும் குறிப்பிடப்பட்டது.


ஜனாதிபதியை சந்திக்க வேண்டிய நாளன்று காலையில் ரிபாயி சாஹிப் என்னை அப்துஸ்ஸமது சாஹிப்  வீட்டுக்கு அழைத்துச் சென்றார். அங்கு காஜா மொய்தீன் எம். பி. யும் வந்திருந்தார்.



அங்கு நாங்கள் சென்றபோது ஒரு புதிய பிரச்சனை தோன்றியது! அப்துஸ்  ஸமது சாஹிபும் காஜா மொய்தீனும் ஒரு மாதிரியாக என்னை, ஏற இறங்க வியப்புடன் பார்த்தனர்!

Thursday, July 11, 2013

இறுதி வெற்றி இஸ்லாத்திற்கே!!!



ந்தியாவில் எந்த ஒரு சமுதாயமாவது தரக்குறைவான பழிகளைச் சுமக்கிறது என்றால் அது நிச்சயம் இஸ்லாமியச் சமுதாயமாகத்தான் இருக்க முடியும்.

     தரக்குறைவுக்கு  இந்தச் சமூகம் எப்போதும் காரணமாக அமைவதே இல்லை. இது உலக வரலாற்றின் போதனையாக இருக்கிறது.

     அபாண்டங்களை இந்தச் சமுதாயத்தின் மீது தொடர்ந்து கொட்டுகிறார்கள். அவச் சொற்களை வசைமாரியாக கக்குகிறார்கள்.

     முஸ்லிம்கள் பிற்போக்குவாதத்தில் ஊறிப்போனார்கள். அவர்கள் அடிப்படைவாதிகள். நவீன உலகம் அவர்களுக்கு இன்னும் அறிமுகம் ஆகவில்லை. குகைக்குள் வாழ்ந்தவர்களாகவே இன்னும் குறுகிப் போய் இருக்கிறார்கள். என்றெல்லாம் இங்கே யார் யாரோ பேசுகிறார்கள். எழுதுகிறார்கள்.

     இந்தக் குற்றச்சாட்டுகளுக்கு ஆதாரம் வைத்திருக்கிறார்களா? என்றால் அதுதான் இல்லை.

     உலகம் கம்யுனிஸத்தால் கபளீகரம் செய்யப்படும் என்று கருதப்பட்ட காலம் இருந்தது. ஆனால் அது நடக்கவில்லை. கம்யுனிஸம் கரைந்து கொண்டே வருகிறது. அந்த இடத்தை கேபிடலிஸம் எனச் சொல்லப்படும் முதலாளித்துவம் முழுக்கப் பிடித்துக் கொண்டதா என்று பார்த்தால் அதுவும் இல்லை.
    
     இவற்றுக்கு மாறாக இஸ்லாம் அங்கே தன்னுடைய வெற்றித் திருமுகத்தை அறிமுகப்படுத்துகிறது. இதுதான் பிரச்சனை. இதைத்தான் இங்கே பலரால் தாங்கிக் கொள்ள முடியவில்லை.

     முஸ்லிம் பெண்கள் கோணிகளால் மூடப்பட்ட ஒரு பொருள் போல் இங்கே பத்திரிக்கைகளால் சித்தரிக்கப்படுகின்றனர்.

     நாம் கோஷா முறையில் இருந்தால் அது பழமைவாதம். பெண் அடிமைத்தனம்.

     குஜராத்திகளும், மார்வாரிகளும் அப்படித் தன்னைக் காட்டினால் அது கலாச்சாரம்.

     அவர்கள் கைவசம் பிரச்சார சாதனங்கள் இருக்கின்றன. எனவேதான் பத்திரிகை தொடங்கி அத்தனை பிரச்சார சாதனங்களும் இஸ்லாமிய சமுதாயத்திற்கு எதிராக திருப்பப்பட்டுவிட்டன. எப்படி இது நடந்தாலும் இறுதி வெற்றி இஸ்லாத்திற்குத்தான். இதுதான் இதுவரை உள்ள உலகச் சரித்திரம். இன்ஷாஅல்லாஹ் இதுவேதான் இனிமேலும் தொடரும்.


[1997, ஜனவரி மாதம் நடைபெற்ற தமிழ்நாடு முஸ்லிம் சமுதாய நலச்சங்கம் மாநில மாநாட்டில் பேசியது. நன்றி: இஸ்லாமிய சகோதரத்துவ குரல்

Saturday, July 6, 2013

அற்புத சாதனையாளர் அ.க. ரிபாயி சில நினைவுகள்!!! - 2


'ஹஸன்'
(சரித்திர ஆசிரியர் செய்யதுனா முஸ்லிம் முரசு மாத இதழில் எழுதிய தொடர்)



     1967ல் முதலமைச்சரான அண்ணா அடுத்த ஓராண்டிற்குள் 1968ல் காலமானார்.

     அடுத்த முதலமைச்சர் தேர்ந்தெடுக்கும் முன்பாக நாவலர் நெடுஞ்செழியன் தற்காலிக முதலமைச்சராகப் பதவிப் பிரமாணம் செய்விக்கப்பட்டார். அவர் செய்ய வேண்டியிருந்த முதல் காரியம் அண்ணாவின் அடக்கவிடத்திற்கு ஏற்பாடு செய்வதுதான்.

     மெரீனா கடற்கரையில் சமாதி அமைப்பது என்பதுதான் அவர் எடுத்த முடிவு.

     மீண்டும் பல ஆண்டுகள் கழிந்த பிறகு எம்.ஜி.ஆர். முதலமைச்சராக இருந்து காலமான போதும், அவரே முதலமைச்சராக இருந்து மெரீனா கடற்கரையில் எம்.ஜி.ஆரின் உடலை அடக்க ஏற்பாடு செய்தார்.

     நம் முஸ்லிம் புலவர்கள் பெரும்பாலானோர் வலீமார்களாக விளங்கியவர்கள். அவர்களைப் பற்றி துச்சமாக நினைத்துப் பேசிய நெடுஞ்செழியன், எந்தக் காரியத்தைச் செய்ய மாட்டேன் என்று சொன்னாரோ அதை அவரே செய்ய நேர்ந்தது விசித்திரமல்லவா?

     மீண்டும் 1967க்கு வருவோம். முஸ்லிம் புலவர்களுக்கு நினைவுச் சின்னம் நிறுவ அனுமதி மறுக்கப்பட்டது, அதுவும் அண்ணாவின் ஆட்சியில், முஸ்லிம்களுக்கு பேரதிர்ச்சி அளிப்பதாக இருந்தது. அதைக் கண்டித்து முஸ்லிம் முரசில் நீண்ட கட்டுரை எழுதினேன். அதைக் காங்கிரஸ்காரர்கள் எடுத்து நன்கு பயன்படுத்தினர்.

     இலங்கை, சிங்கப்பூர், மலேசியாயாவில் எல்லாம் அது மறுபிரசுரமாயிற்று. முஸ்லிம் லீக்கினர் அந்த நிலை நீடிப்பதை விரும்பவில்லை. அதற்கு மாற்றாக முஸ்லிம் முரசு முஸ்லிம் லீக் விரோதப் பத்திரிகை, தி.மு.க.வுக்கும் முஸ்லிம் லீக்குக்கும் இடையே பிளவு ஏற்படுத்த முனைகிறது என்றெல்லாம் தாக்கத் தொடங்கினர். காயிதேமில்லத்தும் மற்ற சில தலைவர்களும் தி.மு.க. தவறு செய்துவிட்டது என்று கருதினாலும் அந்த விஷயம் பெரிது படுத்தப்படுவதை  விரும்பவில்லை.

     ரிபாயி சாஹிப் இவ்விஷயத்தில் நடுநிலை வகித்தார். அதோடு அவர் ஊரிலேயே அதிக காலம் செலவழித்து வந்ததால், அவருக்குப் பதிலாக உரிமைக் குரலை கவனித்து வந்தவர்கள் முரசுக்கு எதிராகத் தொடர்ந்து எழுதிக் கொண்டே வந்தனர். அவற்றிற்கெல்லாம் பதில் எழுத வேண்டிய நிர்பந்தம் முரசுக்கு ஏற்பட்டுக் கொண்டிருந்தது.

     1970ல் ஒரு நாள் காயிதேமில்லத் அவர்களைக் காணச் சில நண்பர்களுடன் நானும் சென்றிருந்தேன். அவர்கள் வழக்கம்போல என்னை நேராகப் பார்த்து அன்று எதுவும் பேசவில்லை. விடைபெற்று நாங்கள் எழுந்ததும் சற்று  நின்று, மற்ற நண்பர்களை நோக்கி, என்னைச் சுட்டிக்காட்டி "This man was responsible for my starting Urimai Kural. Now he is trying to destroy it" (நான் உரிமைக் குரலைத் தொடங்குவதற்கு இந்த மனிதன் தான் காரணமாக இருந்தார். இப்போது அதை அழிக்க முயற்சி செய்கிறார்) என்று வேகமாகப் பேசினார்கள்.

     "இப்போது உரிமைக் குரலை நடத்துபவர்கள் என்னைத் தனிப்பட்ட முறையில் தாக்குகிறார்கள். நான் வேறுபட்ட கருத்தை வெளியிடுகிறேன் என்பதற்காக. அதற்கெல்லாம் நான் பதிலளிக்கிறேனே தவிர உரிமைக் குரலுக்கு எதிராக எதையும் எழுதுவதில்லையே" என்றேன்.

     தலைவரவர்கள் பதில் எதுவும் பேசவில்லை.சலாம் சொல்லி விடைபெற்று வந்தேன். அதற்குப் பிறகு அவர்களைச் சென்று பார்த்து பேசும் பாக்கியம் கிடைக்கவில்லை.

     அதற்கு முன்பெல்லாம் ஆண்டுக்கணக்கில், எத்தனையோ தடவை காலையிலிருந்து இரவு பத்து மணிவரை எங்களை உட்கார வைத்து பேசிக் கொண்டே இருப்பார்கள். கடைசி எலக்ட்ரிக் ரயிலைப் பிடித்து இல்லம் திரும்புவார்கள்.
     இடையில், பார்க்க வந்த எத்தனையோ பேர்களை திரும்பிப் போய் மறுநாள் வரச்சொல்லி விடுவார்கள். "இவர்கள் பத்திரிக்கைக் காரர்கள். நான் சொல்லும் செய்திகளைக் கேட்டுக் கொண்டு போய் மக்களுக்கு மத்தியில் பரப்புவார்கள். செய்திகளை எட்டச் செய்வார்கள். எனவே இவர்களுடன் பேசுவதுதான் முக்கியம்" என்று சொல்லி விடுவார்கள்.

     அப்படிப் பட்டவர்கள் கடைசி காலத்தில் என் மீது வருத்தம் அடைய நேர்ந்தது துரதிர்ஷ்டம் என்றுதான் சொல்ல வேண்டும். எனினும் முஸ்லிம் முரசு கட்சி ஏடல்ல, சுதந்திரமாகச் செயல்பட்ட பத்திரிகை என்பதால் அக்கட்சி முடிவுகள் சில சமுதாயத்தைப் பாதிக்கும் என்று தோன்றும் போதெல்லாம் மாற்றுக் கருத்தை வெளியிடத் தயங்கியதில்லை.

     முஸ்லிம் லீக்கிற்காக ஆங்கில தினசரி ஏடான "டான்" (Dawn) என்னும் ஆங்கில பத்திரிக்கையின் முதல் ஆசிரியராக நியமிக்கப்பட்ட அல்தாப் ஹுசைன் என்பவரை நோக்கி "பத்திரிகையில் துணிச்சலுடன் எழுத வேண்டும். தவறு என்று பட்டால் தாட்சண்யமின்றி, சுட்டிகாட்டி எழுத வேண்டும். உங்களின் காயிதே ஆஸமே தவறு செய்தாலும் அஞ்சக் கூடாது" என்று காயிதே ஆஸம் முஹம்மது அலி ஜின்னா சாஹிபே கூறினார்.

     ஒரு முறை கட்சி முடிவு தவறானது என்று விமர்சித்து எழுதிய கட்டுரை வெளிவந்த பக்கத்திலேயே ஜின்னாஹ் சாஹிபின் மேற்சொன்ன அறிவுரையை பெட்டிச் செய்தியாகப் போட்டு விட்டு என் விமர்சனத்தை முடித்திருந்தேன்.

     அதைப் பார்த்த காயிதே மில்லத் அவர்கள் " செய்வதை சாமர்த்தியமாகத்தான் செய்கிறார்" என்று குறிப்பிட்டதாக நண்பர்கள் மூலம் அறிந்தேன்.

     இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை வரும் ராஜ்யசபைத் தேர்தல் 1972 ஏப்ரலில் நடைபெறுவதாக இருந்தது. 1970ல் ஜனாப் ஏ.கே.ஏ. அப்துஸ் சமது சாஹிப் அவர்கள் ராஜ்யசபை உறுப்பினராக இரண்டாம் முறை தேர்ந்தெடுக்கப்பட்டு பதவி வகித்து வந்தார். அதற்கு முன்பாக எஸ்.ஏ. காஜா முஹ்யித்தீன் அவர்கள் ராஜ்யசபை உறுப்பினராக பதவியில் இருந்தார். 1972 ராஜ்யசபைத் தேர்தலிலும் தனக்கு ஒரு ஓர் இடம் ஒதுக்கப்பட வேண்டும் என்று முஸ்லிம் லீக் கோரியதை தி.மு.க. ஏற்றது.

     அந்த இடத்திற்கு ரிபாயி சாஹிபி வேட்பாளராக நிறுத்த காயிதேமில்லத் முடிவு செய்தார்கள். கலைஞரின் தலைமையிலான தி.மு.க. அரசும் அதை ஏற்றுக் கொண்டது. இதற்கிடையே காயிதேமில்லத் அவர்களும் தீவிர நோய்வாய்ப்பட்டு சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்தார்கள்.

     தி.மு.க. வாக்களித்தபடி ரிபாயி சாஹிப் ராஜ்யசபைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். அந்தச் செய்தியை காயிதே மில்லத் அவர்கள் அறிந்து கொள்ள முடியாதபடி நினைவிழந்த நிலையில் இருந்தார்கள்.


     05.04.1972 அன்று காயிதேமில்லத் அவர்கள் காலமானார்கள்.(இன்னாலில்லாஹி..)

Saturday, June 8, 2013

அற்புத சாதனையாளர் அ.க. ரிபாயி சில நினைவுகள்!!!


'ஹஸன்'
(சரித்திர ஆசிரியர் செய்யதுனா முஸ்லிம் முரசு மாத இதழில் எழுதிய தொடர்)
     

"நீங்கள் கடிதம் எழுதியிருக்கப் படாது!" என்றார்கள் காயிதேமில்லத். அழுத்தம் திருத்தமாக!

     திகைத்துப் போய் அவர்களின் முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தேன்.

     "பெரிய முதலாளி (மு.ந. அப்துர்ரஹ்மான் சாஹிப்) அவர்களுக்கு நான் முறைப்படி கடிதம் எழுதி, அவர்கள் மகன் ரிபாயியை சமுதாயப் பணிக்காக, பத்திரிகை ஆசிரியர் பதவியை ஏற்று நடத்துவதற்காக, சென்னைக்கு அனுப்பி வைக்கும்படி கோர வேண்டும். அதை அவர்கள் ஏற்றுக் கொண்டால் அவர்கள் ரிபாயிக்கு உத்தரவிட வேண்டும் அதுதான் முறை!" என்றார்கள்.

     விஷயம் புரிந்ததும், என் அவசர புத்திக்காக அவர்களிடம் மன்னிப்புக் கேட்டுக் கொண்டேன்.

     "கைர். பரவாயில்லை. எதோ நடக்க வேண்டியிருந்தது நடந்துவிட்டது. உங்களின் அளவு கடந்த ஆர்வம எனக்கு நன்றாகத் தெரியும். அதனால் அவசரப்பட்டு விட்டீர்கள். இனி நடக்க வேண்டியதைப் பார்ப்போம். அபூதாலிப், மகனி இருவரையும் அழைத்து வாருங்கள். பத்திரிக்கையின் பெயரை முடிவு செய்யவேண்டும். பத்திரிக்கையை நாமே கம்போஸ் செய்ய வேண்டும். வெளி அச்சகத்தில் பிரிண்ட் செய்துக் கொள்ளலாம்.கம்போசிங் செய்ய வேண்டிய அச்செழுத்துக்களை வாங்கி விடுவோம்!" என்றார்கள்.
     அதைத் தொடர்ந்து சுறுசுறுப்பாகச் செயல்பட்டோம். பத்திரிக்கையின் பெயர்த் தேர்வு சுலபமானதாக இல்லை. கடைசியில் காயிதேமில்லத் அவர்களே, "உரிமைக் குரல்" என்ற பெயரைக் கூறி இதற்கு மேல் விவாதம் வேண்டாம், இதுவே உறுதியாக இருக்கட்டும் என்றார்கள்.
     அனைத்து ஏற்பாடுகளும் செய்யப் பெற்று உரிமைக் குரலின் முதல் இதழ் 11.12.1961 - ல் வெளிவந்தது.

     சென்னை மண்ணடி வெங்கட மேஸ்திரி தெரு எண் 19 கட்டிடத்தில் பத்திரிகை அலுவலகம் அமைந்தது.

     பெரிய முதலாளி அவர்கள், தம மகன் ஏ.கே. ரிபாயி அவர்களை கடுமையான நிபந்தனைகளுடன் சென்னைக்கு அனுப்பி வைத்தார்கள். அவை என்னவென்றால், பத்திரிகையாசிரியர் வேலைக்காக ஒரு பைசா கூட சம்பளம் வாங்கக் கூடாது. வீடு பிடிக்கவும், குடும்பம் நடத்தவும் மற்ற எந்தச் செலவுக்காகவும் பத்திரிக்கையிலிருந்து பணம் பெறக் கூடாது. தேவைப்படும் பணம் அனைத்தையும் அவர்களே ஊரிலிருந்து தம் மகனுக்கு அனுப்புவார்கள்.  இந்த நிபந்தனைகளை பத்திரிகை ஆசிரியராக இருந்த காலம் முழுதுவம் அப்படியே கடைப் பிடித்தார், ரிபாயி சாஹிப்.

     சைதாப்பேட்டையில் ஒரு பெரிய வீடு எடுத்துக் கொண்டு 36 ஆண்டுகளுக்கு (எழுதப்பட்ட ஆண்டு 1998) முன்பே மாதந்தோறும் ஆயிரக் கணக்கில் செலவு செய்து கொண்டிருந்தார். இன்றைய நிலையில் அத் தொகையை ஒன்றுக்குப் பத்தாகப் பெருக்கிப் பார்க்க வேண்டும்.
     உரிமைக் குரல் 1961 இறுதியில் ஆரம்பிக்கப்பட்ட உடனேயே அடுத்து 1962 க்கான பொதுத் தேர்தலும் வந்து சேர்ந்தது. தி.மு.க., முஸ்லிம் லீக் ஆகிய இரு கட்சிகளும் கூட்டு சேர்ந்தன. காயிதேமில்லத், அண்ணா ஆகிய இரு பெருந்தலைவர்களும் பிரச்சாரத்தில் ஈடுபட்டனர். தஞ்சை மாவட்டத்தில் காயிதேமில்லத் அவர்கள் தேர்தல் பிரச்சாரம் செய்யச் சென்ற போது "உரிமைக் குரல்" நிருபராக, நானும் உடன் பிரயாணம் செய்து, உரிமைக் குரலுக்கு கட்டுரைகள் அனுப்பிக் கொண்டிருந்தேன்.
    
     பார்லிமென்ட்டிற்கு ஏ.கே.ஏ. அப்துல் ஸமது சாகிப் வட சென்னை தொகுதியிலும், நாவலர் திருப்பூர் மொய்தீன் நாகை பாராளுமன்றத் தொகுதியிலும் சாரண பாஸ்கரன் நாகை சட்ட மன்றத் தொகுதியிலும், ரிபாயி சாகிப் தென்காசி சட்டமன்றத் தொகுதியிலும் நிறுத்தப்பட்டனர். ஆனால், இவர்கள் யாருமே வெற்றி பெறவில்லை.

     தேர்தல் வேலையைப் பார்க்கச் சென்ற ரிபாயி சாஹிப் தேர்தலுக்குப்  பின் ஊரில் ஏற்பட்ட பிரச்சனைகளை கவனிப்பதற்காக நீண்ட காலம் ஊரிலேயே தங்கி விட்டார்.

     எனவே "உரிமைக் குரல்" ஆசிரியர் பொறுப்பை நானே ஏற்று நடத்த வேண்டியிருந்தது. மற்ற நண்பர்களும் உதவி வந்தார்கள்.

     1963 ம் ஆண்டின் முதல் அரையாண்டு காலம் நான் மதுரைக்கு பணிமாற்றலாகச் சென்றிருந்தேன். அப்போது ரிபாயி சாஹிப் அவர்களே ஊரிலிருந்து திரும்பி வந்து பத்திரிக்கையை கவனித்து வந்தார். அதே ஆண்டு ஜூன் மாதம் சென்னைக்கு மீண்டும் மாற்றலாகி வந்தேன். அது முதல்  அக்டோபர் 1966ல் முஸ்லிம் முரசு நிறுவனர் எஸ். அப்துர் ரஹீம் காலமாகும் வரை உரிமைக் குரல் ஆசிரியர் குழுவில் முக்கியப் பங்கு வகித்தேன். காயல்பட்டணம் எம். கே.எஸ். முஹ்யித்தீன் (காக்கா) பி.ஏ.பி.எல். அவர்களோடும் ரிபாயி சாஹிப் அவர்களோடும் மற்ற நண்பர்கள் சிலரோடும் உரிமைக் குரல் அலுவலகத்தில் நாங்கள் கழித்த நாட்கள் வாழ்நாளில் மறக்க முடியாதவை. அருமையான அரசியல் பயிற்சிப் பாசறையாகவே அது விளங்கிற்று. உரிமைக் குரல்  மிக உயர்ந்த தரமுள்ள ஏடாக வெளி வந்துக் கொண்டிருந்தது. முக்கியமான சில சந்தர்ப்பங்களில் காயிதேமில்லத் அவர்களே தலையங்கம் தீட்டுவார்கள். அவற்றை அவர்களின் கையெழுத்தோடு வெளியிடுவோம்.
    
     1966 அக்டோபரில் முரசு நிறுவனர் அப்துர் ரஹீம் அவர்கள் மறைந்தவுடன் அதன் ஆசிரியர் பொறுப்பு ஏன் மீது சுமத்தப்பட்டதால் நான் உரிமைக் குரல் அலுவலகம் செல்வது மிகவும் குறைந்து வந்து, சில மாதங்களுக்குப் பிறகு அடியோடு  நின்றது. அது பற்றி காயிதேமில்லத் அவர்களிடம் அபூதாலிப் அண்ணன் குறைச் செல்ல சென்றார்.  காயிதேமில்லத் அவர்கள் அவரிடம் கூறிய பதில் "முஸ்லிம் முரசும் நமது பத்திரிகைதான். அது நம்முடைய ஆள் ஒருவரின் பொறுப்பில் வெளிவருவது நல்லது தானே" என்பது!

     அதற்கு முன்பாக "உரிமைக் குரல்" அலுவலகத்தில் பத்திரிக்கையின் சிறப்பு கருதி நாங்கள் செயல்பட்ட விதத்தையும் இங்கு சொல்லி வைப்பது இத்துறையில் ஈடுபடுபவோருக்கு பயனுள்ள குறிப்பாக அமையும்.

     "உரிமைக் குரல்" இந்தியன் யூனியன் முஸ்லிம் லீகின் தலைமையகத்திலிருந்து காயிதேமில்லத் அவர்களின் மேற் பார்வையின் கீழ் வெளியிடப் பெரும் அதிகாரப் பூர்வமான கட்சி வெளியீடாகையால் அதன் தரமும் உயர்வாக இருக்க வேண்டும். அகில இந்திய அரசியலை முஸ்லிம் லீகின் பார்வையில் அலசக்கூடியதாகவும் இருக்க வேண்டும் என நினைத்தோம்.
    
     அதற்காக, தமிழக ஆங்கில, தமிழ் ஏடுகள் மட்டுமின்றி டில்லியிலிருந்து "ஹிந்துஸ்தான் டைம்ஸ்", கல்கத்தாவிலிருந்து "ஸ்டேட்ஸ்மேன்", பம்பாயிலிருந்து "டைம்ஸ் ஆப் இந்தியா", பெங்களூரிலிருந்து "டெக்கான் ஹெரால்ட்" ஆகிய தினசரி ஆங்கிலப் பத்திரிக்கைகளையும் மற்றும் வாரப் பத்திரிக்கைகளையும் நிறையப் படிப்போம். முஸ்லிம் உலக செய்திகளுக்காக டில்லியிலிருந்து "தஆவத்" உர்தூ தினசரியையும் ஏர்மெயில் மூலம் மறுநாளே கிடைக்க ஏற்பாடு செய்தோம். மேலும் ஆர்.எஸ்.எஸ். வார ஏடான "ஆர்கனைஸர்" பத்திரிக்கையும் படிப்போம். அதில் வரும் பொய்களும் துவேஷக் கட்டுரைகளும் எங்களுடைய எழுத்துக்களுக்கு சூடேற்றி விறுவிறுப்பை கொடுக்கும். இப்படியாக "உரிமைக் குரலுக்கு நிகர் உரிமைக் குரல்தான்" என்று வாசகர்கள் எண்ணும்படி பத்திரிகை வெளி வந்துக் கொண்டிருந்தது. உரிமைக் குரல் குழுவினர் கூடி விவாதித்தப் பின்னரே அந்த வாரத் தலையங்கம் எழுதப்படும். தேவைப்படும் போதெல்லாம் காயிதேமில்லத் அவர்களிடமும் போன் மூலம் கருத்து கேட்டுக் கொள்வோம்.

      உர்தூவிலும் ஒரு பத்திரிகை தொடங்கி சிறிது காலம் சென்றவுடன் இ.யூ.மு.லீக் சார்பில் வரவேண்டும் என்னும் நியாயமான கோரிக்கை எழுந்தது. அதன் பலனாக "நுஸ்ரத்" எனும் பெயரில் உர்தூ வார எடும் தொடங்கப் பெற்றது. எனினும் அது சரிவர வெளிவரவில்லை.

     1967 பிப்ரவரியில் நடைபெற வேண்டிய பொதுத் தேர்தலுக்கான அறிவிப்பு வெளிவந்தது.

     அண்ணா தலைமையில், தி.மு.க. வும் முஸ்லிம் லீகும் ராஜாஜியின் சுதந்திரக் கட்சியும் இணைந்து போட்டியிட்டன. அசைக்க முடியாதெனக் கருதப்பட்டு வந்த காங்கிரஸ் ஆட்சி வீழ்த்தப்பட்டது. அண்ணா முதல் மந்திரியானார். முஸ்லிம் லீக் பிரதிநிதிகளாக மூன்று பேர் எம்.எல்.ஏ.க்களாகத் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இந்தத் தடவை ரிபாயி சாஹிப் தேர்தலில் நிற்கவில்லை.

     அடுத்த ஆண்டான 1968  ஜனவரியி இரண்டாவது உலகத் தமிழ் மாநாடு சென்னையில் நடைபெறுமென அறிவிக்கப்பட்டது. அதையொட்டி சென்னைக் கடற்கரைச் சாலையில் புகழ்பெற்ற தமிழ்ப் புலவர்கள் பலருக்குச் சிலை நிறுவ ஏற்பாடாயிற்று.

     கே.பி. செய்குத்தம்பி முதலான நண்பர்கள் பலர் சந்தித்து முஸ்லிம் தமிழ் புலவர்களுக்கும் நினைவுச் சின்னம் நிறுவப்பட வேண்டுமெனவும், நாம் சிலை வைக்கக் கூடாது, என்பதால் தூண் ஒன்று நாட்டி, அதில் முஸ்லிம் புலவர்களுள் உமறுப்புலவர், புலவர் நாயகம், வண்ணக்களஞ்சியப் புலவர் போன்ற மிகப் பெரிய புலவர்களின் பெயர்களையும், அவர்களைப் பற்றிய சிறு சிறு குறிப்புகளையும் பொறிக்க வேண்டும், அதன் செலவை சமுதாயமே ஏற்றுக் கொள்ளும் என்றும் தீர்மானம் நிறைவேற்றி வெளியூர் சென்றிருந்த அண்ணாவைச் சந்தித்தனர். அவர் "சென்னைக்குப் போய் நாவலர் நெடுஞ்செழியனிடம் பேசுங்கள்" என்று சொல்லிவிட்டார். குழுவுக்கு மேயர் ஹபிபுல்லா பேக் தலைவராக இருந்தார். குழுவினர், நாவலரைச் சந்தித்து, கோரிக்கையை முன்வைத்த போது, "இதை நான் அனுமதிக்க மாட்டேன். மெரினாவை சமாதி கட்டும் கல்லறையாக மாற்ற உடன்பட முடியாது!" என்று முகத்தில் அறைந்தார் போல் பதில் சொல்லி விட்டார்.

     அப்படிச் சொன்னவர், அடுத்த ஆண்டிலேயே அவர் தற்காலிக முதலமைச்சராக இருக்கும்போது ஒரு சமாதியையும், மேலும் பல ஆண்டுகளுக்குப் பிறகு அதே நிலையில் மற்றொரு சமாதியையும் அமைக்க அவர் கையாலேயே உத்தரவு பிறப்பிக்கும் படியும் ஆயிற்று.


நன்றி: முஸ்லிம் முரசு.

Monday, June 3, 2013

A.K. ரிபாய் சாஹிப்

     தென்காசி மேடை முதலாளி என்று தென் தமிழக மக்களால் அன்புடன் அழைக்கப் பட்டு வந்த குடும்பத்தின் பேரப்பிள்ளை அஹமது  கபீர் ரிபாய்.

மு.ந.அப்துல் ரஹ்மான் சாஹிப் , காயிதே மில்லத் இருவரும் சகலபாடிகள்.

 ஆடுதுறைப் பெருவணிகர் ஜமால் முஹம்மது சாஹிப். சென்னை ஜமாலியா அரபிக் கல்லூரி, இன்னுமுள்ள ஜமாலியா அறக்கட்டளைகளின் நிறுவனர். திருச்சி ஜமால் முஹம்மத் கல்லூரி இவர் பெயரிலேயே இயங்கி வருகிறது. இந்த ஜமால் முஹமது சாஹிபின் தம்பி ஜமால் அப்துல்லாஹ் சாஹிபின் மூத்த மகளார் ஜமால் பாத்திமாவை மு.ந. அப்துல் ரஹ்மான் சாஹிப் திருமணம் செய்திருந்தார். இரண்டாவது மகள் ஜமால் மரியமை, மு.ந.அ  அவர்களின் தம்பி மு.ந. முஹம்மது சாஹிப் நிக்காஹ் புரிந்து இருந்தார். அடுத்த மகள் ஜமால் ஹமீதாவை காயிதே மில்லத் முஹம்மத் இஸ்மாயில் சாஹிப் மணம் செய்திருந்தார். இந்த மூவரும் தமிழக முஸ்லிம்கள் வரலாற்றில் குறிக்கத்தக்கப் பெருமைக்குரியவர்கள். அல்ஹம்து லில்லாஹ்.

மு.ந.அ  - தென்னிந்திய இஷா அத்துல் இஸ்லாம் சபையின் நிறுவனத் தலைவர். இந்தியன் யூனியன் முஸ்லிம் லீகின் தமிழ் மாநில துணைத் தலைவர்.

காயிதே மில்லத் மறைந்த உடன் இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் அகில இந்திய தற்காலிகத் தலைவராக சில மாதங்கள் இருந்தார். அதன் பின் கேரளத்து பாபக்கி தங்கள் அப்பொறுப்பை ஏற்றார்.

 காயிதே மில்லத் - இந்தியன் யூனியன் முஸ்லிம் லீகின் நிறுவனத் தலைவர்.

மு.ந.மு - திருநெல்வேலி முஸ்லிம் அனாதை நிலைய நிறுவனத் தலைவர்.

                     அண்ணலாரின் வாழ்க்கை வரலாற்றைத்  தமிழ் உரை நடையில் முதன்முதல் திருநபி சரித்திரம் என்ற பெயரில் எழுதி நூலாக  வெளியிட்டவர்.

மு.ந.அ வின் மூத்த மகனார் A.K. ரிபாய் சாஹிப். இரண்டாவது மகனார் தமிழகச்  சட்டமன்ற கடையநல்லூர் தொகுதி  முன்னாள் உறுப்பினர். ஷாகுல் ஹமீது சாஹிப் .

அடுத்து மகளார் காதர் ஹைருன்னிஷா பேகம்.

 மு.ந.அ  1952 இல் தமிழக சட்டமன்ற திருநெல்வேலி தொகுதி முஸ்லிம் லீக் உறுப்பினர்.

மு.ந.முஹம்மது சாஹிப் 1939 ஆம் ஆண்டு சென்னை ராஜதானியின் மேலவை உறுப்பினர்.

A.K.ரிபாய் சாஹிபின் சிறிய தந்தை மு.ந.மு. அவர்களின் மூத்த மகனார் ஜமால் முஹம்மது சாஹிப் - இவர், இவரின்  தந்தையார் மறைவிற்கு பின் முஸ்லிம் அனாதை நிலையத்தின் தலைவராக வாழ்நாள் முழுதும் இருந்து வந்தார்.

ஜமால் முஹம்மது சாஹிபின் துணைவியார் காதர்  ஹைருன்னிஷா பேகம். இவர் நெல்லை முஸ்லிம் சிறுமியர் கல்வி நிலையத்தின் நிறுவனத் தலைவியர். இவர் A.K.ரிபாய் சாஹிபின் தங்கை.

தி.மு.க. வின் கூட்டணியோடு முஸ்லிம் லீக் 1962 இல் தேர்தலை விடுதலைக்குப் பின் முதன்முதல் சந்தித்தது. இதில் நெல்லை சட்டமன்ற தொகுதியில் காயிதே மில்லத்தின் தம்பி K.T.M.அஹமது இப்ராஹிம் சாஹிப் முஸ்லிம் லீக் வேட்பாளராகப் போட்டியிட்டார்.

தென்காசி தொகுதிக்கு முஸ்லிம் லீக் வேட்பாளராக  A.K.ரிபாய் சாஹிப் போட்டியிட்டார். வட சென்னை மக்களவைத் தேர்தலில் முஸ்லிம் லீக் வேட்பாளராக A.K.A.அப்துல் ஸமது சாஹிப்   போட்டியிட்டார். நாகப்பட்டணம் சட்டமன்றத் தொகுதியில் முஸ்லிம் லீக் வேட்பாளராக கவிஞர் திலகம் சாரண பாஸ்கரனார் போட்டியிட்டார். இன்னும் மூவரும் இந்தத் தேர்தலில் போட்டியிட்டனர். இவர்கள் அனைவருமே வெற்றி வாய்ப்பை இழந்தார்கள்.

1966 ஆம் ஆண்டு வாக்கில் தமிழ் மாநிலத்தின் மாநில செயலாளராக முஸ்லிம் லீகின் தொடக்கக் காலத்திலிருந்து பதவி வகித்து வந்த K.T.M. அஹமது  இப்ராகிம் சாஹிப் மறைந்தார்கள். அதைத் தொடர்ந்து தமிழ் மாநில முஸ்லிம் லீகின் மாநில செயலாளராக 1979 வரை A.K. ரிபாய் சாஹிப் பதவி வகித்து வந்தார்.

1972 தமிழ் நாடு சட்டமன்றத்தின் உறுப்பினர்களால் டெல்லி நாடாளுமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப் படும் உறுப்பினர்களில் முஸ்லிம்  லீக் சார்பில் A.K.ரிபாய் சாஹிப்  தேர்ந்தெடுக்கப் பட்டார். அந்த நேரத்தில் உடன் தேர்ந்தெடுக்கப் பட்ட உறுப்பினர்களில் அதிகமாக வாக்குகளைப்  பெற்று வெற்றிப் பெற்றவர் A.K.ரிபாய் சாஹிப்.

1979 க்கு பின்னர் தந்தையார் நிறுவனத் தலைவராக இருந்து வந்த தென் இந்திய இஷா அத்துல் இஸ்லாம் சபையின் தலைவராகவும், இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் தமிழ் மாநில முதல் துணைத் தலைவராகவும் தன் வாழ்நாள் முழுவதும் பொறுப்பு வகித்து வந்தார்.

1998-ம் ஆண்டு  தன் மூத்த மகனார் A. நத்ஹர் பாவா ஜலால் மற்றும் அவர் தம் துணைவியார் Dr. ஹிப்பத் பாத்திமா உடன் ஹஜ் கடமை நிறைவேற்றச் சென்றார் A.K.ரிபாய் சாஹிப். மதினத்தில் கடமைகளை நிறைவேற்றி விட்டு மக்கத்தில் இருந்த காலத்தில் மார்ச் 21-ல் மக்ரிப் தொழுகையை நிறைவேற்றி வந்து அமர்ந்த நிலையில் அவரே தன் கபன் துணியை மேலே போர்த்திக் கொண்ட நிலையில் இறை நாட்டப்படி இறைவனளவில் சேர்ந்தார்.         

அவரின் ஜனாஸா கஅபாவில் பஜ்ர் தொழுகை முடிந்த பின்னர் பல்லாயிரக்கணக்கானவர்கள் ஜனாஸா தொழுகையில் பங்கு பெற மக்காவிலேயே நல்லடக்கம் செய்யப்பட்டது.

A.K.ரிபாய் சாஹிபின் துணைவியார் ஆமினா அம்மையார்.

இவர்களின் வாரிசுகள் :

1. A. நத்ஹர் பாவா ஜலால். M .Sc . (Agri )
(தமிழகத் தோட்டக் கலைத்துறை முன்னாள் இணை இயக்குனர்.)
2. A. அப்துல் ரஹ்மான் பாரூக். B.Sc
3. A. முஹம்மது சாஹிப் பிலால்
4. . ஹிலால் முஸ்தபா
5. A. முஹம்மது இஸ்மாயில் ரபீக் (Auditor)


A.K. ரிபாய் சாஹிபின் நிலையான வாரிசுகள்!
(அவரெழுதிய நூற்கள்)

1. அற்புதச் சாதனைகள்
2. என்னைக் கவர்ந்த இஸ்லாம். (மொழி பெயர்ப்பு) - லியோ பால்டு அஸது வாழ்க்கை வரலாறு.
3. விஞ்ஞான ஒளியில் பைபிளும் குர்ஆனும். (மொழி பெயர்ப்பு) - மாரிஸ் புகைல்.
4.  நாயகமே ! நாயகமே! எங்கள் நபி நாயகமே!
5.  ஞானப் பெண்ணே! உன்னைத் தான் !
6.  கவ்மின் காவலர் (காயிதே மில்லத் வாழ்க்கை வரலாறு).
7.  காயிதே ஆஜம் (முஹம்மதலி ஜின்னாஹ் வாழ்க்கை வரலாறு)
8.  சமுதாய நீரோட்டத்தில் சங்கமம் (மு.ந.அ வாழ்க்கை வரலாறு)
9.  ஆயிரம் மலர்களே மலருங்கள் (சமூக நவீனம்)
10.  மைசூர் வேங்கையின் சபதம் (வரலாற்று நவீனம்)
11. A.K.R. இன் இஸ்லாமிய சிறுகதைகள்
12. 21 - ஆம் நூற்றாண்டில் இஸ்லாம்.
13. தமிழகத்தில் இஸ்லாமியர் வரலாறு.
14. 21 - ஆம் நூற்றாண்டில் ஐரோப்பாவின் மார்க்கம்.
15. திரு குர்ஆன் சிந்தனைகள்
16. திருச்சி மறுமலர்ச்சி வார இதழில் "குற்றவாளிக் கூண்டில் காந்திஜீ" - தொடர் எழுதினார். இன்னும் நூல் வடிவம் பெறவில்லை.
17. நெல்லை அனாதை நிலையத்தின் சார்பாக சமுதாய நலச் சங்கம் வெளியிட்ட காயிதே மில்லத் மலர் தொகுப்பு ஆசிரியர்.

18. பண்டிதர் நேருவின் அமைச்சரவையில் அமைச்சராக இருந்த பேராசிரியர் ஹுமாயூன்  கபீர் ( ஜார்ஜ் பெர்னாண்டஸின் மாமனார்) எழுதிய மக்களும் நதிகளும் எனும் நாவலை A.K.ரிபாய் சாஹிப், மகனீ, முஹம்மது கவுஸ் மூவரும் இணைந்து தமிழாக்கம் செய்து வெளியிட்டனர். இந்நூல் ஒரு பிரதிக் கூட இப்போது இல்லை. (இருப்பவர்கள் தயவு செய்து தந்து உதவுங்கள்).

19. 1963 இல் உதயமான இந்தியன் யூனியன் முஸ்லிம் லீகின் உரிமையான வார இதழ் "உரிமைக் குரலின்" ஆசிரியராகக் கடைசி வரை  பணிபுரிந்தார். இதில் நூற்றுக்கணக்கான கட்டுரைகள் எழுதி இருக்கிறார். அவற்றுள் வியட்நாம் - அமெரிக்க யுத்தம் பற்றிய தொடர் அனைவராலும் பாராட்டப் பட்டது.

20. பிறை மாத இதழில் "மனக்கோட்டை" என்ற தொடர்கதையை ஆமினா என்ற புனை பெயரில் எழுதினார். இந்தக் கதை நூல் வடிவம் பெறவில்லை.

குறிப்பு :
நெல்லை முஸ்லிம் அனாதை நிலையத்தின் அமைப்பான தமிழ் நாடு முஸ்லிம் சமுதாய நலச் சங்கத்திற்கு உரிமையுள்ள "இஸ்லாமிய சகோதரத்துவக் குரல்" மாத இதழில் "ஹஸினாவின் கணவர்கள்" என்ற தொடர் கதையினை எழுதி வந்த வேளையில் தான், ஹஜ்ஜுக்கு சென்று இறை நாட்டப்படி மறைந்தார்கள். ஆனால் இந்தத் தொடர்கதை முழுவதையும் எழுதி பத்திரிகை அலுவலகத்திற்கு ஏற்கனவே  தந்திருந்தார்கள். இதுதான் A.K.ரிபாயின் கடைசி எழுத்துப் பணி. இன்னும் நூலாகவில்லை. அந்த நேரத்தில் அப்பத்திரிகையின் ஆசிரியராக. ஹிலால் முஸ்தபா பொறுப்பு வகித்திருந்தார்.

ஊடகங்களில் A.K. ரிபாய் சாஹிபின் பணிகள்!

K .T .M அஹமத் இப்ராஹிம் சாஹிப் ஆசிரியராக இருந்து வெளிவந்த முஸ்லிம் லீகின் மாத இதழ் "முஸ்லிம் " பத்திரிகையின் துணை ஆசிரியராக A .K .ரிபாய் சாஹிப் பணியாற்றி உள்ளார். பத்திரிகை அலுவலகம் சென்னை மவுண்ட் ரோடில் இருந்தது.

A.K.A.அப்துல் ஸமது சாஹிப் ஆசிரியராக இருந்து வெளிவந்த "மணிச்சுடர்" நாளிதழின் மூன்றாம் பக்கக் கட்டுரை தொடர்ந்து எழுத A.K.A.அப்துல் ஸமது சாஹிப், ரிபாய் சாஹிபை வற்புறுத்தி அழைத்தார்ரிபாய் சாஹிப் அப்பொழுது தனது வாவா நகர கிராமத்தில் குடி பெயர்ந்திருந்தார். ஒரு உறுதி மொழியின் பெயரில் முதல் ஆறு மாதங்கள் தினம் தொடர்ந்து மூன்றாம் பக்கக் கட்டுரையை எழுதி வருவேன். அதன் பின் சொந்த கிராமத்திற்கு திரும்பி விடுவேன் என ஸமது சாஹிபிடம் கூறினார். ஸமது சாஹிபும் ஒப்புக்கொண்டு வரவேற்றார். மணிச்சுடரில் தொடங்கிய முதல் ஆறு மாத காலத்துக்கு அற்புதமான கட்டுரைகள் வந்தன.

முஸ்லிம் நாளிதழிலோ, உரிமைக்குரல் வார இதழிலோ, மணிச்சுடர் நாளிதழிலோ பணி புரிந்ததற்காக ஒரு பைசா கூட சம்பளமோ, வெகுமானமோ A.K.ரிபாய் சாஹிப் வாங்கியதே இல்லை.


A.K.A.அப்துல் ஸமது சாஹிபின் தந்தையார் ஆசிரியராக இருந்த மணி விளக்கு மாத இதழ் ஆசிரியர் குழுவிலும் பணி ஆற்றினார் A.K.ரிபாய் சாஹிப்.