அற்புத சாதனையாளர் அ. க. ரிபாயி சில நினைவுகள்.
1974 ஏப்ரல் மாதத்தில் ரிபாயி சாஹிப் ராஜ்ய சபை
உறுப்பினராகப் பதவி ஏற்றார்.
ரிபாயி சாஹிப் ஒரு
பெரிய பேச்சாளர் என்று பெயரெடுக்க வில்லை. ஆகையால் அவர் பாராளுமன்ற
விவாதங்களில் அதிகம் பங்கெடுப்பதில்லை. எனினும் கேள்விகள் கேட்பதன்
மூலமும் கடிதங்கள் எழுதுவதன் மூலமும் தம் பதவியை நன்கு
பயன்படுத்தி சமுதாயத்திற்கு நல்ல முறையில் பணியாற்றி வந்தார்.
அன்றியும் வேறெந்த
எம். பி. யும் செய்ய நினைக்காத அரிய பணி ஒன்றையும் அவர் தமது பதவிக் காலத்தில் நிறைவேற்றி வந்தார்.
இந்தியாவிலேயே மிகச்
சிறந்து விளங்கும் நூல் நிலையங்களில் ஒன்று 'பார்லிமெண்ட் லைப்ரரி'. அவர் புது டில்லியில் தங்கும் காலங்களில் பாதிநேரம் அந்த நூல் நிலையத்தில்தான்
இருப்பார். அவர் அங்கு அப்படி என்னதான் செய்து கொண்டிருந்தார் என்பதைப் பிறகு
பார்ப்போம்.
எம்.பி.யாக இருந்த
காலத்தில் அவர் சென்னை இராயப்பேட்டையில் உள்ள லாய்ட்ஸ் காலனியில் ஒரு வீட்டில்
தங்கி இருந்தார். நண்பர்களுக்கு அடிக்கடி அழைப்புக் கொடுத்து சமுதாயப் பிரச்சனைகளை
விவாதிப்பார்.
அப்படிப்பட்ட
சந்திப்பின்போது பலமுறை என்னை டில்லிக்கு தம்முடைய விருந்தினராக வரும் படி அழைத்து
வந்தார்.
இறுதியாக 1976 மார்ச்சில் அவருடைய அழைப்பை ஏற்று அவருடன் டில்லி செல்லத் துணிந்தேன்.
காயிதே மில்லத்
அவர்கள் லோக் சபா உறுப்பினராக ஏறத்தாழ பத்து ஆண்டுகள் இருந்தபோது அவர்களுக்கு வெஸ்ட்டர்ன் கோர்ட்
என்னும் மாளிகையில் ஐந்தாம் நம்பர் விடுதி ஒதுக்கப்பட்டிருந்தது. அவர்களின் மறைவும் ரிபாயி சாஹிபின் பதவி ஏற்பும் ஒரே மாதத்தில் நிகழ்ந்ததால் அதே
விடுதியை தமக்குத் தரும்படி ரிபாயி சாஹிப் கேட்டுப் பெறுவதற்கு எளிதாயிற்று.
அப்படிக் கிடைத்ததில் முஸ்லிம் லீகினருக்கு ஏற்பட்ட மகிழ்ச்சி அளவிடற்கரிதாக இருந்தது.
இ. யூ. முஸ்லிம் லீகின் வரலாற்றில் அதற்கு அவ்வளவு முக்கியத்துவம்
ஏற்பட்டிருப்பதை யாரும் மறுக்க இயலாது.
காயிதே மில்லத்
அவர்கள் பல்லாண்டு காலம் தங்கியிருந்த இடத்தில் ரிபாயி சாஹிபின் விருந்தினனாக நான்
போய் இருந்தது எனக்குப் பெருமையையும் பெருமகிழ்ச்சியையும் அளித்தது.
விருந்தோம்பலில்
ரிபாயி சாஹிபுக்கு நிகர் அவரேதான். எனக்கு எந்தவிதமான வசதிக் குறைவும் ஏற்படாதபடி நன்கு கவனித்துக் கொண்டார்.
அதோடு நான் டில்லியை
நன்கு சுற்றிப் பார்க்க எல்லா ஏற்பாடுகளையும் செய்தார். டில்லியில் அப்போது
பணியாற்றிக் கொண்டிருந்த நாகூரைச் சேர்ந்த தொலைத் தொடர்புத்துறை அதிகாரியான என்
நண்பன் ராமலிங்கமும் அவ்வகையில் எனக்கு உதவினார். ரிபாயி சாஹிபின் உறவினரும்
திருச்சி ஜமால் முஹம்மது கல்லூரியின் இப்போதைய தாளாளருமான ஜனாப் அப்துல் கபூர் என்னை தமது ஸ்கூட்டரின் பின்னால் அமர்த்தி டில்லியை நன்றாக
சுற்றிக் காட்டினார். நகர சுற்றுலாப் பேருந்திலும் நானே சென்று சுற்றிப்
பார்த்தேன். தாஜ்மஹால் பார்க்க நான் தனியே ஆக்ரா சென்று திரும்பினேன்.
வரலாற்று முக்கியம்
வாய்ந்த டில்லி வலிமார்களின் அடக்கத் தலங்களுக்கும் நினைவுச் சின்னங்களுக்கும் ரிபாயி
சாஹிப் அழைத்துச் சென்றார். அதற்கெல்லாம் சிகரம் வைத்தாற்போல, ஒரு
நாள் டில்லி முஸ்லிம் பத்திரிகையாளர் ஒருவரையும் அழைத்துக் கொண்டு
என்னைப் பஞ்சாப் மாநிலம் அழைத்துப் போனார்.
முஜத்தித் அல் பு
தானி [12-ம் ஹிஜ்ரி நூற்றாண்டின் சீர்திருத்தவாதி] என்னும் சிறப்புப் பெயரோடு புகழ்பெற்று
விளங்கும் செய்கு அஹ்மது ஸர்ஹிந்தீ என்னும் பெரியார் பஞ்சாபின் இருதயம் போன்று
விளங்கும் பகுதியிலுள்ள ஸர்ஹிந்த் என்னும் நகரில் அடங்கியுள்ளார்கள்.
சக்ரவர்த்தி அக்பரின்
இறுதிக் காலத்திலும் அவர் மகன் ஜஹாங்கீரின் ஆட்சியிலும் அப்பெரியார்
வாழ்ந்தார்கள். அம்மன்னர்களின் தவறான போக்குகளைச் சாடி அவர்களுக்கு எழுதிய
கடிதங்கள் இஸ்லாமிய உலகு முழுவதும் இன்றும் புகழ்பெற்று விளங்குகின்றன. பல
மொழிகளிலும் பெயர்க்கப் பட்டுள்ளன அப்பெரியார் பற்றி நானும் படித்திருந்தேன்.
ஆகையால் அவர்களுடைய ஜியாரத்திற்குப் போவதை எனக்கு கிடைத்த அரிய வாய்ப்பாக ஏற்றுச்
சென்றேன்.
ஸர்ஹிந்தில் ஒரு
பெரிய தோட்டத்தில் அமைந்துள்ள தர்காவும் அதன் அருகில் உள்ள மஸ்ஜிதும் சுமாரான
நிலையில் பராமரிக்கப் படுகின்றன. தர்கா பகுதியில் 2 3 முஸ்லிம்
குடும்பங்கள் மட்டுமே வாழ்கின்றன. அவர்கள் தர்காப் பணிகளை கவனிப்பவர்கள். தொலை
தூரங்களில் இருந்து ஜியாரத்திற்காக முஸ்லிம்கள் வந்து போய்க் கொண்டிருந்தாலும்
அவ்வூரில் வேறு முஸ்லிம் குடும்பங்கள் இல்லை. முழுக்க முழுக்க சீக்கியர்கள்
நிறைந்த ஊர் அது.
அங்கிருந்து 15 கிலோ மீட்டர் தொலைவில் ''மாலோ கோட்லா'' என்றொரு சமஸ்தானம் உண்டு அதன் நவாபின்
நிர்வாகத்தில்தான் தர்கா இருக்கிறது. முஸ்லிம்களும் ஓரளவு அங்கு
வாழ்கின்றனர். போதுமான முஸ்லிம்கள் தர்கா பகுதியில் இல்லாது
இருந்தாலும் அங்கு ''ஜும்ஆ'' த் தொழுகையை
நிறைவேற்றி வருகிறார்கள்.
ஸர்ஹிந்தில் வாழும்
சீக்கியர் பலர் தர்காவுக்கு வருகிறார்கள். நாங்கள் சென்றிருந்த போது
சில சீக்கியர்கள் ''முஜத்தித்'' அவர்களின் கப்ருக்கு அருகில் மணிக்கணக்கில் தியானத்தில் ஆழ்ந்திருந்தார்கள்.
டில்லியிலிருந்து
இரவு ரயிலில் புறப்பட்டு மறுநாள் காலை ஸர்ஹிந்தி போய்ச் சேர்ந்த நாங்கள் அன்று
பிற்பகல் விரைவுப் பேருந்தில் கிளம்பி டில்லி திரும்பினோம் வழியில் பானிபட் போன்ற
சரித்திரப் பிரசித்தி பெற்ற பல ஊர்களைக் கடந்து வந்தோம். பஞ்சாப் மாநிலத்தின் செழிப்பையும் நன்கு காண முடிந்தது.
அதே போல
டில்லியில்லிருந்து அஜ்மீர் சென்று திரும்பவும் ரிபாயிசாஹிப் ரயில் பயணத்திற்கு
முன்னேற்பாடு செய்திருந்தார். பயணம் புறப்படும் நேரம், நான் கடுமையான
காய்ச்சலால் பாதிக்கப்பட்டதால் நான் உடன் செல்ல முடியவில்லை. ரிபாயி சாஹிபும் இன்னொரு நண்பரும் புறப்பட்டு போய் அஜ்மீரில் ஒரு நாள் தங்கி
விட்டு மறுநாள் திரும்பினர்.
1976 -ல் இந்திரா காந்தியின் எமர்ஜன்சி ஆட்சி நடந்து
கொண்டிருந்தது. அதனால் இடையிடையே சில கட்டுப்பாடுகளை எதிர்கொள்ள வேண்டி வந்தது.
அப்போது குடியரசுத்
தலைவராக இருந்தவர் பக்ருத்தீன் அலி அஹ்மது அவர்கள்.
அவருடைய ''பிரஸ்
செக்ரட்டரி ''யாக இருந்தவர் கோவையைச் சேர்ந்த ஜனாப் அப்துல் ஹமித். அவர்
சென்னையில் சில ஆண்டுகள் ''ஹிந்து'' நாளேட்டின் துணை ஆசிரியராகவும்
பணியாற்றியிருகிறார். அப்போது அவருடன் எனக்கும் பரிச்சயம் இருந்தது.
ஜனாதிபதியிடம் என்னை
அழைத்துப் போய் அறிமுகப்படுத்த ரிபாயி சாஹிப் விரும்பினார். ஜனாப் அப்துஸ்ஸமது
சாஹிப் அவர்களின் பதவிக் காலமும் முடிவடைவதாக இருந்த நேரம். அவர் குடியரசுத்
தலைவரிடம் விடை பெறுவதற்கும் சேர்ந்து சந்திப்பதிற்கு ஜனாப் அப்துல் ஹமீது மூலம்
தேதியும் நேரமும் குறிப்பிடப்பட்டது.
ஜனாதிபதியை சந்திக்க
வேண்டிய நாளன்று காலையில் ரிபாயி சாஹிப் என்னை அப்துஸ்ஸமது சாஹிப் வீட்டுக்கு அழைத்துச் சென்றார். அங்கு காஜா
மொய்தீன் எம். பி. யும் வந்திருந்தார்.
அங்கு நாங்கள்
சென்றபோது ஒரு புதிய பிரச்சனை தோன்றியது! அப்துஸ்
ஸமது சாஹிபும் காஜா மொய்தீனும் ஒரு மாதிரியாக என்னை, ஏற இறங்க வியப்புடன் பார்த்தனர்!