Wednesday, July 24, 2013

அற்புத சாதனையாளர் அ. க. ரிபாயி சில நினைவுகள்!!!

அற்புத சாதனையாளர் அ. க. ரிபாயி சில நினைவுகள்.


1974 ஏப்ரல் மாதத்தில் ரிபாயி சாஹிப் ராஜ்ய சபை உறுப்பினராகப் பதவி ஏற்றார்.

ரிபாயி சாஹிப் ஒரு பெரிய பேச்சாளர் என்று பெயரெடுக்க வில்லை. ஆகையால் அவர் பாராளுமன்ற விவாதங்களில் அதிகம் பங்கெடுப்பதில்லை. எனினும் கேள்விகள் கேட்பதன் மூலமும் கடிதங்கள் எழுதுவதன் மூலமும் தம் பதவியை நன்கு பயன்படுத்தி சமுதாயத்திற்கு நல்ல முறையில் பணியாற்றி வந்தார்.

அன்றியும் வேறெந்த எம். பி. யும் செய்ய நினைக்காத அரிய பணி ஒன்றையும் அவர் தமது பதவிக் காலத்தில் நிறைவேற்றி வந்தார்.

இந்தியாவிலேயே மிகச் சிறந்து விளங்கும் நூல் நிலையங்களில் ஒன்று 'பார்லிமெண்ட் லைப்ரரி'. அவர் புது டில்லியில் தங்கும் காலங்களில் பாதிநேரம் அந்த நூல் நிலையத்தில்தான் இருப்பார். அவர் அங்கு அப்படி என்னதான் செய்து கொண்டிருந்தார் என்பதைப் பிறகு பார்ப்போம்.

எம்.பி.யாக இருந்த காலத்தில் அவர் சென்னை இராயப்பேட்டையில் உள்ள லாய்ட்ஸ் காலனியில் ஒரு வீட்டில் தங்கி இருந்தார். நண்பர்களுக்கு அடிக்கடி அழைப்புக் கொடுத்து சமுதாயப் பிரச்சனைகளை விவாதிப்பார்.

அப்படிப்பட்ட சந்திப்பின்போது பலமுறை என்னை டில்லிக்கு தம்முடைய விருந்தினராக வரும் படி அழைத்து வந்தார்.

இறுதியாக 1976 மார்ச்சில் அவருடைய அழைப்பை ஏற்று அவருடன் டில்லி செல்லத் துணிந்தேன்.

காயிதே மில்லத் அவர்கள் லோக் சபா உறுப்பினராக ஏறத்தாழ பத்து ஆண்டுகள் இருந்தபோது அவர்களுக்கு வெஸ்ட்டர்ன் கோர்ட் என்னும் மாளிகையில் ஐந்தாம் நம்பர் விடுதி ஒதுக்கப்பட்டிருந்தது. அவர்களின் மறைவும் ரிபாயி சாஹிபின் பதவி ஏற்பும் ஒரே மாதத்தில் நிகழ்ந்ததால் அதே விடுதியை தமக்குத் தரும்படி ரிபாயி சாஹிப் கேட்டுப் பெறுவதற்கு எளிதாயிற்று. அப்படிக் கிடைத்ததில் முஸ்லிம் லீகினருக்கு ஏற்பட்ட மகிழ்ச்சி அளவிடற்கரிதாக இருந்தது. இ. யூ. முஸ்லிம் லீகின் வரலாற்றில் அதற்கு அவ்வளவு முக்கியத்துவம் ஏற்பட்டிருப்பதை  யாரும்  மறுக்க இயலாது.

காயிதே மில்லத் அவர்கள் பல்லாண்டு காலம் தங்கியிருந்த இடத்தில் ரிபாயி சாஹிபின் விருந்தினனாக நான் போய் இருந்தது எனக்குப் பெருமையையும் பெருமகிழ்ச்சியையும் அளித்தது.

விருந்தோம்பலில் ரிபாயி சாஹிபுக்கு நிகர் அவரேதான். எனக்கு எந்தவிதமான வசதிக் குறைவும் ஏற்படாதபடி நன்கு கவனித்துக் கொண்டார்.

அதோடு நான் டில்லியை நன்கு சுற்றிப் பார்க்க எல்லா ஏற்பாடுகளையும் செய்தார். டில்லியில் அப்போது பணியாற்றிக் கொண்டிருந்த நாகூரைச் சேர்ந்த தொலைத் தொடர்புத்துறை அதிகாரியான என் நண்பன் ராமலிங்கமும் அவ்வகையில் எனக்கு உதவினார். ரிபாயி சாஹிபின் உறவினரும் திருச்சி ஜமால் முஹம்மது கல்லூரியின் இப்போதைய தாளாளருமான ஜனாப் அப்துல் கபூர் என்னை தமது ஸ்கூட்டரின் பின்னால் அமர்த்தி டில்லியை நன்றாக சுற்றிக் காட்டினார். நகர சுற்றுலாப் பேருந்திலும் நானே சென்று சுற்றிப் பார்த்தேன். தாஜ்மஹால் பார்க்க நான் தனியே ஆக்ரா சென்று திரும்பினேன்.

வரலாற்று முக்கியம் வாய்ந்த டில்லி வலிமார்களின் அடக்கத் தலங்களுக்கும் நினைவுச் சின்னங்களுக்கும் ரிபாயி சாஹிப் அழைத்துச் சென்றார். அதற்கெல்லாம் சிகரம் வைத்தாற்போல, ஒரு நாள் டில்லி முஸ்லிம் பத்திரிகையாளர் ஒருவரையும் அழைத்துக் கொண்டு என்னைப் பஞ்சாப் மாநிலம் அழைத்துப் போனார்.

முஜத்தித் அல் பு தானி [12-ம் ஹிஜ்ரி நூற்றாண்டின் சீர்திருத்தவாதி] என்னும் சிறப்புப் பெயரோடு புகழ்பெற்று விளங்கும் செய்கு அஹ்மது ஸர்ஹிந்தீ என்னும் பெரியார் பஞ்சாபின் இருதயம் போன்று விளங்கும் பகுதியிலுள்ள ஸர்ஹிந்த் என்னும் நகரில் அடங்கியுள்ளார்கள்.

சக்ரவர்த்தி அக்பரின் இறுதிக் காலத்திலும் அவர் மகன் ஜஹாங்கீரின் ஆட்சியிலும் அப்பெரியார் வாழ்ந்தார்கள். அம்மன்னர்களின் தவறான போக்குகளைச் சாடி அவர்களுக்கு எழுதிய கடிதங்கள் இஸ்லாமிய உலகு முழுவதும் இன்றும் புகழ்பெற்று விளங்குகின்றன. பல மொழிகளிலும் பெயர்க்கப் பட்டுள்ளன அப்பெரியார் பற்றி நானும் படித்திருந்தேன். ஆகையால் அவர்களுடைய ஜியாரத்திற்குப் போவதை எனக்கு கிடைத்த அரிய வாய்ப்பாக ஏற்றுச் சென்றேன்.

ஸர்ஹிந்தில் ஒரு பெரிய தோட்டத்தில் அமைந்துள்ள தர்காவும் அதன் அருகில் உள்ள மஸ்ஜிதும் சுமாரான நிலையில் பராமரிக்கப் படுகின்றன. தர்கா பகுதியில் 2 3 முஸ்லிம் குடும்பங்கள் மட்டுமே வாழ்கின்றன. அவர்கள் தர்காப் பணிகளை கவனிப்பவர்கள். தொலை தூரங்களில் இருந்து ஜியாரத்திற்காக முஸ்லிம்கள் வந்து போய்க் கொண்டிருந்தாலும் அவ்வூரில் வேறு முஸ்லிம் குடும்பங்கள் இல்லை. முழுக்க முழுக்க சீக்கியர்கள் நிறைந்த ஊர் அது.


அங்கிருந்து 15 கிலோ மீட்டர் தொலைவில் ''மாலோ கோட்லா'' என்றொரு சமஸ்தானம் உண்டு அதன் நவாபின் நிர்வாகத்தில்தான் தர்கா இருக்கிறது. முஸ்லிம்களும் ஓரளவு அங்கு வாழ்கின்றனர். போதுமான முஸ்லிம்கள் தர்கா பகுதியில் இல்லாது இருந்தாலும்  அங்கு ''ஜும்ஆ'' த் தொழுகையை நிறைவேற்றி வருகிறார்கள்.


ஸர்ஹிந்தில் வாழும் சீக்கியர் பலர் தர்காவுக்கு வருகிறார்கள். நாங்கள் சென்றிருந்த போது சில சீக்கியர்கள் ''முஜத்தித்'' அவர்களின் கப்ருக்கு அருகில் மணிக்கணக்கில் தியானத்தில் ஆழ்ந்திருந்தார்கள்.


டில்லியிலிருந்து இரவு ரயிலில் புறப்பட்டு மறுநாள் காலை ஸர்ஹிந்தி போய்ச் சேர்ந்த நாங்கள் அன்று பிற்பகல் விரைவுப் பேருந்தில் கிளம்பி டில்லி திரும்பினோம் வழியில் பானிபட் போன்ற சரித்திரப் பிரசித்தி பெற்ற பல ஊர்களைக் கடந்து வந்தோம். பஞ்சாப் மாநிலத்தின் செழிப்பையும் நன்கு காண முடிந்தது.


அதே போல டில்லியில்லிருந்து அஜ்மீர் சென்று திரும்பவும் ரிபாயிசாஹிப் ரயில் பயணத்திற்கு முன்னேற்பாடு செய்திருந்தார். பயணம் புறப்படும் நேரம், நான் கடுமையான காய்ச்சலால் பாதிக்கப்பட்டதால் நான் உடன் செல்ல முடியவில்லை. ரிபாயி சாஹிபும் இன்னொரு நண்பரும் புறப்பட்டு போய் அஜ்மீரில் ஒரு நாள் தங்கி விட்டு மறுநாள் திரும்பினர்.


1976 -ல் இந்திரா காந்தியின் எமர்ஜன்சி ஆட்சி நடந்து கொண்டிருந்தது. அதனால் இடையிடையே சில கட்டுப்பாடுகளை எதிர்கொள்ள வேண்டி வந்தது.


அப்போது குடியரசுத் தலைவராக இருந்தவர் பக்ருத்தீன் அலி அஹ்மது அவர்கள்.

அவருடைய ''பிரஸ் செக்ரட்டரி ''யாக இருந்தவர் கோவையைச் சேர்ந்த ஜனாப் அப்துல் ஹமித். அவர் சென்னையில் சில ஆண்டுகள் ''ஹிந்து'' நாளேட்டின் துணை ஆசிரியராகவும் பணியாற்றியிருகிறார். அப்போது அவருடன் எனக்கும் பரிச்சயம் இருந்தது.


ஜனாதிபதியிடம் என்னை அழைத்துப் போய் அறிமுகப்படுத்த ரிபாயி சாஹிப் விரும்பினார். ஜனாப் அப்துஸ்ஸமது சாஹிப் அவர்களின் பதவிக் காலமும் முடிவடைவதாக இருந்த நேரம். அவர் குடியரசுத் தலைவரிடம் விடை பெறுவதற்கும் சேர்ந்து சந்திப்பதிற்கு ஜனாப் அப்துல் ஹமீது மூலம் தேதியும் நேரமும் குறிப்பிடப்பட்டது.


ஜனாதிபதியை சந்திக்க வேண்டிய நாளன்று காலையில் ரிபாயி சாஹிப் என்னை அப்துஸ்ஸமது சாஹிப்  வீட்டுக்கு அழைத்துச் சென்றார். அங்கு காஜா மொய்தீன் எம். பி. யும் வந்திருந்தார்.



அங்கு நாங்கள் சென்றபோது ஒரு புதிய பிரச்சனை தோன்றியது! அப்துஸ்  ஸமது சாஹிபும் காஜா மொய்தீனும் ஒரு மாதிரியாக என்னை, ஏற இறங்க வியப்புடன் பார்த்தனர்!

Thursday, July 11, 2013

இறுதி வெற்றி இஸ்லாத்திற்கே!!!



ந்தியாவில் எந்த ஒரு சமுதாயமாவது தரக்குறைவான பழிகளைச் சுமக்கிறது என்றால் அது நிச்சயம் இஸ்லாமியச் சமுதாயமாகத்தான் இருக்க முடியும்.

     தரக்குறைவுக்கு  இந்தச் சமூகம் எப்போதும் காரணமாக அமைவதே இல்லை. இது உலக வரலாற்றின் போதனையாக இருக்கிறது.

     அபாண்டங்களை இந்தச் சமுதாயத்தின் மீது தொடர்ந்து கொட்டுகிறார்கள். அவச் சொற்களை வசைமாரியாக கக்குகிறார்கள்.

     முஸ்லிம்கள் பிற்போக்குவாதத்தில் ஊறிப்போனார்கள். அவர்கள் அடிப்படைவாதிகள். நவீன உலகம் அவர்களுக்கு இன்னும் அறிமுகம் ஆகவில்லை. குகைக்குள் வாழ்ந்தவர்களாகவே இன்னும் குறுகிப் போய் இருக்கிறார்கள். என்றெல்லாம் இங்கே யார் யாரோ பேசுகிறார்கள். எழுதுகிறார்கள்.

     இந்தக் குற்றச்சாட்டுகளுக்கு ஆதாரம் வைத்திருக்கிறார்களா? என்றால் அதுதான் இல்லை.

     உலகம் கம்யுனிஸத்தால் கபளீகரம் செய்யப்படும் என்று கருதப்பட்ட காலம் இருந்தது. ஆனால் அது நடக்கவில்லை. கம்யுனிஸம் கரைந்து கொண்டே வருகிறது. அந்த இடத்தை கேபிடலிஸம் எனச் சொல்லப்படும் முதலாளித்துவம் முழுக்கப் பிடித்துக் கொண்டதா என்று பார்த்தால் அதுவும் இல்லை.
    
     இவற்றுக்கு மாறாக இஸ்லாம் அங்கே தன்னுடைய வெற்றித் திருமுகத்தை அறிமுகப்படுத்துகிறது. இதுதான் பிரச்சனை. இதைத்தான் இங்கே பலரால் தாங்கிக் கொள்ள முடியவில்லை.

     முஸ்லிம் பெண்கள் கோணிகளால் மூடப்பட்ட ஒரு பொருள் போல் இங்கே பத்திரிக்கைகளால் சித்தரிக்கப்படுகின்றனர்.

     நாம் கோஷா முறையில் இருந்தால் அது பழமைவாதம். பெண் அடிமைத்தனம்.

     குஜராத்திகளும், மார்வாரிகளும் அப்படித் தன்னைக் காட்டினால் அது கலாச்சாரம்.

     அவர்கள் கைவசம் பிரச்சார சாதனங்கள் இருக்கின்றன. எனவேதான் பத்திரிகை தொடங்கி அத்தனை பிரச்சார சாதனங்களும் இஸ்லாமிய சமுதாயத்திற்கு எதிராக திருப்பப்பட்டுவிட்டன. எப்படி இது நடந்தாலும் இறுதி வெற்றி இஸ்லாத்திற்குத்தான். இதுதான் இதுவரை உள்ள உலகச் சரித்திரம். இன்ஷாஅல்லாஹ் இதுவேதான் இனிமேலும் தொடரும்.


[1997, ஜனவரி மாதம் நடைபெற்ற தமிழ்நாடு முஸ்லிம் சமுதாய நலச்சங்கம் மாநில மாநாட்டில் பேசியது. நன்றி: இஸ்லாமிய சகோதரத்துவ குரல்

Saturday, July 6, 2013

அற்புத சாதனையாளர் அ.க. ரிபாயி சில நினைவுகள்!!! - 2


'ஹஸன்'
(சரித்திர ஆசிரியர் செய்யதுனா முஸ்லிம் முரசு மாத இதழில் எழுதிய தொடர்)



     1967ல் முதலமைச்சரான அண்ணா அடுத்த ஓராண்டிற்குள் 1968ல் காலமானார்.

     அடுத்த முதலமைச்சர் தேர்ந்தெடுக்கும் முன்பாக நாவலர் நெடுஞ்செழியன் தற்காலிக முதலமைச்சராகப் பதவிப் பிரமாணம் செய்விக்கப்பட்டார். அவர் செய்ய வேண்டியிருந்த முதல் காரியம் அண்ணாவின் அடக்கவிடத்திற்கு ஏற்பாடு செய்வதுதான்.

     மெரீனா கடற்கரையில் சமாதி அமைப்பது என்பதுதான் அவர் எடுத்த முடிவு.

     மீண்டும் பல ஆண்டுகள் கழிந்த பிறகு எம்.ஜி.ஆர். முதலமைச்சராக இருந்து காலமான போதும், அவரே முதலமைச்சராக இருந்து மெரீனா கடற்கரையில் எம்.ஜி.ஆரின் உடலை அடக்க ஏற்பாடு செய்தார்.

     நம் முஸ்லிம் புலவர்கள் பெரும்பாலானோர் வலீமார்களாக விளங்கியவர்கள். அவர்களைப் பற்றி துச்சமாக நினைத்துப் பேசிய நெடுஞ்செழியன், எந்தக் காரியத்தைச் செய்ய மாட்டேன் என்று சொன்னாரோ அதை அவரே செய்ய நேர்ந்தது விசித்திரமல்லவா?

     மீண்டும் 1967க்கு வருவோம். முஸ்லிம் புலவர்களுக்கு நினைவுச் சின்னம் நிறுவ அனுமதி மறுக்கப்பட்டது, அதுவும் அண்ணாவின் ஆட்சியில், முஸ்லிம்களுக்கு பேரதிர்ச்சி அளிப்பதாக இருந்தது. அதைக் கண்டித்து முஸ்லிம் முரசில் நீண்ட கட்டுரை எழுதினேன். அதைக் காங்கிரஸ்காரர்கள் எடுத்து நன்கு பயன்படுத்தினர்.

     இலங்கை, சிங்கப்பூர், மலேசியாயாவில் எல்லாம் அது மறுபிரசுரமாயிற்று. முஸ்லிம் லீக்கினர் அந்த நிலை நீடிப்பதை விரும்பவில்லை. அதற்கு மாற்றாக முஸ்லிம் முரசு முஸ்லிம் லீக் விரோதப் பத்திரிகை, தி.மு.க.வுக்கும் முஸ்லிம் லீக்குக்கும் இடையே பிளவு ஏற்படுத்த முனைகிறது என்றெல்லாம் தாக்கத் தொடங்கினர். காயிதேமில்லத்தும் மற்ற சில தலைவர்களும் தி.மு.க. தவறு செய்துவிட்டது என்று கருதினாலும் அந்த விஷயம் பெரிது படுத்தப்படுவதை  விரும்பவில்லை.

     ரிபாயி சாஹிப் இவ்விஷயத்தில் நடுநிலை வகித்தார். அதோடு அவர் ஊரிலேயே அதிக காலம் செலவழித்து வந்ததால், அவருக்குப் பதிலாக உரிமைக் குரலை கவனித்து வந்தவர்கள் முரசுக்கு எதிராகத் தொடர்ந்து எழுதிக் கொண்டே வந்தனர். அவற்றிற்கெல்லாம் பதில் எழுத வேண்டிய நிர்பந்தம் முரசுக்கு ஏற்பட்டுக் கொண்டிருந்தது.

     1970ல் ஒரு நாள் காயிதேமில்லத் அவர்களைக் காணச் சில நண்பர்களுடன் நானும் சென்றிருந்தேன். அவர்கள் வழக்கம்போல என்னை நேராகப் பார்த்து அன்று எதுவும் பேசவில்லை. விடைபெற்று நாங்கள் எழுந்ததும் சற்று  நின்று, மற்ற நண்பர்களை நோக்கி, என்னைச் சுட்டிக்காட்டி "This man was responsible for my starting Urimai Kural. Now he is trying to destroy it" (நான் உரிமைக் குரலைத் தொடங்குவதற்கு இந்த மனிதன் தான் காரணமாக இருந்தார். இப்போது அதை அழிக்க முயற்சி செய்கிறார்) என்று வேகமாகப் பேசினார்கள்.

     "இப்போது உரிமைக் குரலை நடத்துபவர்கள் என்னைத் தனிப்பட்ட முறையில் தாக்குகிறார்கள். நான் வேறுபட்ட கருத்தை வெளியிடுகிறேன் என்பதற்காக. அதற்கெல்லாம் நான் பதிலளிக்கிறேனே தவிர உரிமைக் குரலுக்கு எதிராக எதையும் எழுதுவதில்லையே" என்றேன்.

     தலைவரவர்கள் பதில் எதுவும் பேசவில்லை.சலாம் சொல்லி விடைபெற்று வந்தேன். அதற்குப் பிறகு அவர்களைச் சென்று பார்த்து பேசும் பாக்கியம் கிடைக்கவில்லை.

     அதற்கு முன்பெல்லாம் ஆண்டுக்கணக்கில், எத்தனையோ தடவை காலையிலிருந்து இரவு பத்து மணிவரை எங்களை உட்கார வைத்து பேசிக் கொண்டே இருப்பார்கள். கடைசி எலக்ட்ரிக் ரயிலைப் பிடித்து இல்லம் திரும்புவார்கள்.
     இடையில், பார்க்க வந்த எத்தனையோ பேர்களை திரும்பிப் போய் மறுநாள் வரச்சொல்லி விடுவார்கள். "இவர்கள் பத்திரிக்கைக் காரர்கள். நான் சொல்லும் செய்திகளைக் கேட்டுக் கொண்டு போய் மக்களுக்கு மத்தியில் பரப்புவார்கள். செய்திகளை எட்டச் செய்வார்கள். எனவே இவர்களுடன் பேசுவதுதான் முக்கியம்" என்று சொல்லி விடுவார்கள்.

     அப்படிப் பட்டவர்கள் கடைசி காலத்தில் என் மீது வருத்தம் அடைய நேர்ந்தது துரதிர்ஷ்டம் என்றுதான் சொல்ல வேண்டும். எனினும் முஸ்லிம் முரசு கட்சி ஏடல்ல, சுதந்திரமாகச் செயல்பட்ட பத்திரிகை என்பதால் அக்கட்சி முடிவுகள் சில சமுதாயத்தைப் பாதிக்கும் என்று தோன்றும் போதெல்லாம் மாற்றுக் கருத்தை வெளியிடத் தயங்கியதில்லை.

     முஸ்லிம் லீக்கிற்காக ஆங்கில தினசரி ஏடான "டான்" (Dawn) என்னும் ஆங்கில பத்திரிக்கையின் முதல் ஆசிரியராக நியமிக்கப்பட்ட அல்தாப் ஹுசைன் என்பவரை நோக்கி "பத்திரிகையில் துணிச்சலுடன் எழுத வேண்டும். தவறு என்று பட்டால் தாட்சண்யமின்றி, சுட்டிகாட்டி எழுத வேண்டும். உங்களின் காயிதே ஆஸமே தவறு செய்தாலும் அஞ்சக் கூடாது" என்று காயிதே ஆஸம் முஹம்மது அலி ஜின்னா சாஹிபே கூறினார்.

     ஒரு முறை கட்சி முடிவு தவறானது என்று விமர்சித்து எழுதிய கட்டுரை வெளிவந்த பக்கத்திலேயே ஜின்னாஹ் சாஹிபின் மேற்சொன்ன அறிவுரையை பெட்டிச் செய்தியாகப் போட்டு விட்டு என் விமர்சனத்தை முடித்திருந்தேன்.

     அதைப் பார்த்த காயிதே மில்லத் அவர்கள் " செய்வதை சாமர்த்தியமாகத்தான் செய்கிறார்" என்று குறிப்பிட்டதாக நண்பர்கள் மூலம் அறிந்தேன்.

     இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை வரும் ராஜ்யசபைத் தேர்தல் 1972 ஏப்ரலில் நடைபெறுவதாக இருந்தது. 1970ல் ஜனாப் ஏ.கே.ஏ. அப்துஸ் சமது சாஹிப் அவர்கள் ராஜ்யசபை உறுப்பினராக இரண்டாம் முறை தேர்ந்தெடுக்கப்பட்டு பதவி வகித்து வந்தார். அதற்கு முன்பாக எஸ்.ஏ. காஜா முஹ்யித்தீன் அவர்கள் ராஜ்யசபை உறுப்பினராக பதவியில் இருந்தார். 1972 ராஜ்யசபைத் தேர்தலிலும் தனக்கு ஒரு ஓர் இடம் ஒதுக்கப்பட வேண்டும் என்று முஸ்லிம் லீக் கோரியதை தி.மு.க. ஏற்றது.

     அந்த இடத்திற்கு ரிபாயி சாஹிபி வேட்பாளராக நிறுத்த காயிதேமில்லத் முடிவு செய்தார்கள். கலைஞரின் தலைமையிலான தி.மு.க. அரசும் அதை ஏற்றுக் கொண்டது. இதற்கிடையே காயிதேமில்லத் அவர்களும் தீவிர நோய்வாய்ப்பட்டு சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்தார்கள்.

     தி.மு.க. வாக்களித்தபடி ரிபாயி சாஹிப் ராஜ்யசபைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். அந்தச் செய்தியை காயிதே மில்லத் அவர்கள் அறிந்து கொள்ள முடியாதபடி நினைவிழந்த நிலையில் இருந்தார்கள்.


     05.04.1972 அன்று காயிதேமில்லத் அவர்கள் காலமானார்கள்.(இன்னாலில்லாஹி..)