இஸ்லாத்தைப் பற்றி மிகவும் சொற்பமாகவே அறிந்தவன் நான்.
மார்க்க சம்பந்தமாக விசாலமான அறிவு எனக்கு கிடையாது என்பதனை அப்பட்டமாகவே
ஒப்புக்கொள்கிறேன்.
அரபி மொழி அறிவும் எனக்கு அறவே கிடையாது. இஸ்லாத்தைப்
பற்றியும் வாழ்க்கைக்குத் தேவையான மார்க்க நடைமுறைகள் குறித்தும் தமிழ் மொழியிலும்
ஆங்கில மொழியிலும் வெளிவந்த நூல்கள் மற்றும் பிரசங்கங்கள் வாயிலாகவே நான் ஓரளவு
தெரிந்துக் கொண்டிருக்கிறேன்; புரிந்துக் கொண்டிருக்கிறேன். உலமாப் பெருமக்களை
அணுகி நேரில் பேசித் தெரிந்து கொண்ட கேள்வி ஞானமும் சிறிது உண்டு.
குறிப்பாக, இறைவனின் அருள் வேதமாம் திருக் குர்ஆனை, தமிழ்
ஆங்கில மொழி பெயர்ப்புகள் வாயிலாகவே படித்துத் தெரிந்துக் கொண்டுள்ளேன். இது போன்றதே ஹதீது சம்பந்தப்பட்ட கேள்வி ஞானமும்;
அரபி மொழி தெரிந்திருக்காவிட்டாலும், தாய்மொழி மூலமாகவும் பிற மொழிகள் வாயிலாகவும்
திருக்குர்ஆனில் கூறப்பட்டுள்ள விஷயங்களை ஓரளவு விளங்கிக் கொள்ள நேரிடும்பொழுது,
சாதாரண அறிவு படைத்த மனிதனுக்கும், உணர்ச்சிகள் ஏற்படத்தான் செய்கின்றன. சிந்தனை
செய்ய ஆர்வம் மேலிடத்தான் செய்கிறது. உத்வேகம் உண்டாகத்தான் செய்கிறது.
உள்ளத்திலும் உடலிலும் பாதிப்புக்கள், கொந்தளிப்புக்கள்,
ஊசலாட்டங்கள், புத்துணர்சிகள், மனக்கிளர்சிகள் உண்டாகத்தான் செய்கின்றன.
இறைவனுடைய வசனங்களைத் தாங்கிய இத்திருமறை அறிவாளிகளுக்காக
மட்டுமே வடித்துக்கொடுக்கப்பட்ட நூல் அல்ல. அறிவாளிகளும் அரபி மொழி அறிந்தவர்களும்
இவ்வேத நூலை இலகுவாக புரிந்து கொள்ளலாம்; அதன் சாரத்தைத் தெரிந்துகொள்ளலாம். சரளமாகவும்
வேகமாகவும் படித்து துரிதமாகப் புரிந்துகொள்ளும் வாய்ப்புக்கள்
இத்தகையவர்களுக்கு ஏராளம் உண்டு. இது
எதிர்பார்க்கக் கூடியதே. எல்லூம் ஒப்புக்கொள்ள வேண்டியதே.
என்றாலும், சாதாரண பாமரனுக்காகவும் அவனது
நல்வாழ்விற்காகவும் ஈடேற்றத்திர்காகவும் இறக்கப்பட்டதே திருக்குர்ஆன். இத்திருமறையின்
பொருளை, அதன் அர்த்தத்தை, அதில் சொல்லப்பட்டிருக்கும் விஷயங்களை, சாதாரணமான
ஒருவன், அவனுக்குரிய சொற்ப ஞானத்தின் மூலமாகவே ஓரளவு புரிந்துக்கொள்ள முடியும்.
அது சாத்தியமானதே. இதன் காரணமாக அவனும் பலன் பெறவே
செய்கிறான். லாபம் அடையத்தான் செய்கிறான். விஷயங்களைத் தெரிந்து கொள்ளத்தான்
செய்கிறான். அவனாலும் சிந்திக்க முடிகிறது. சீர்தூக்கி பார்க்க முடிகிறது. சரியான
முடிவுக்கும் தீர்மானத்திற்கும் அவனாலும் வரத்தான் முடிகிறது.
ஏனெனில், உலக மக்கள் அனைவருக்காகவும் இறைவனால்
அருளப்பட்டதுதான் திருக்குர்ஆன். சாதாரணமானவனும் பலன் பெற வேண்டும், நற்கதியடைய வேண்டும்,
ஈடேற்றம் பெறவேண்டும் என்ற குறிக்கோளுடனேயே அல்லாஹ்வின் திட்டங்கள்
அமைந்திருக்கின்றன.
அறிஞர் பெருமக்கள்
மட்டும் படித்து தெரிந்து கொள்ளவேண்டிய அல்லது அவர்கள் மூலமாக மட்டுமே புரிந்து
கொள்ளவேண்டிய கிரந்தம் என்பது இதர வேதங்களுக்கு வேண்டுமானால் பொருந்தலாமே தவிர உலக மக்கள்
அனைவருக்காகவும் இறக்கப்பட்ட
திருக்குர்ஆனுக்குப் பொருந்தாது என்பதே எனது கருத்தாகும். படித்தவனும்
பாமரனும் தெரிந்து கொள்ளவேண்டியது; புரிந்து கொள்ளவேண்டியது; எல்லோரையும்
செயல்படத் தூண்டக்கூடியது இந்த வேதம்.
தாய் மொழி மூலமாகவோ அல்லது பிறமொழிகள் மூலமாகவோ
திருக்குர்ஆனின் அர்த்தங்களை, விஷயங்களை, உண்மைகளை, ஏவல் விலக்கல்களை ஒருவன் அறிந்துக்கொள்ள
வாய்ப்புக்கள் கிடைக்கும்பொழுது, அவனாலும் நல்ல முஸ்லிமாக வாழ முடியும்; வாழ
முடிகிறது. இறைநேசச் செல்வராக பரிணமிக்க முடியும்; இது சாத்தியமானதே.
எல்லோரும் பலன் அடைய வேண்டும் என்ற குறிக்கோளுடனேயே
எல்லோருக்காகவும் எல்லாக் காலங்களுக்காகவும் இறைவனால் இது வடிவமைத்துக்
கொடுக்கப்பட்டுள்ளது, எளிதாகப் புரிந்து கொள்ளக்கூடியது இவ்வேதம் என ஆண்டவனே
பகிரங்கமாக இதில் அறிவிப்புச் செய்துள்ளான்.
இப்பூமி மிகவும் பறந்து விரிந்தது என்று நாம் நினைத்துக்
கொண்டிருந்தோம். ஆனால், இன்று உலகம் மிகவும் சுருங்கிவிட்டது. பூமியில் எந்த மூலையை வேண்டுமானாலும் சில மணி நேரத்திற்குள்ளாக இன்று மனிதனால் சென்று அடைந்து
விட இயலும். அதுபோலவே, செய்திகளும் கண் இமைக்கும் நேரத்திற்குள்ளாக உலகை பலதடவைகள்
வலம் வந்து விடுகின்றன.
ரேடியோவும் டெலிவிஷனும் மற்றும் மின்சாதன பொறிகளும் ஒரு
கருத்தை மக்கள் மத்தியில் ஆழமாகப் பதியவைக்கும் கருவிகளாக இன்று விளங்கி
வருகின்றன. "எலெக்ட்ரானிக் மீடியா" வைக்கண்டு அரசாங்கங்களே இன்று
அஞ்சுகின்றன; நடுநடுங்கிக் கொண்டிருக்கின்றன. தினசரி, வார, மாத இதழ் பத்திரிக்கைகளைப்பற்றி
சொல்ல வேண்டியதே இல்லை.
இவை அனைத்தும் அறிவைப் பரப்பும் சாதனங்களாகவும் இன்று
விளங்குகின்றன, விஞ்ஞான உண்மைகளையும் அற்புதங்களையும் எடுத்துச் சொல்லும் அறிவுக்
கருவூலங்களாகவும் காட்சி அளிக்கின்றன. அதே சமயம் மக்களை திசை திருப்பவும்,
உண்மையைத் திரித்துக் கூறவும், காம உணர்ச்சிகளைத் தூண்டிவிடவும்,
குழப்பங்களுக்கும் கிளர்சிக்களுக்கும் வித்திடுவதாகவும் இப்பிரச்சார சாதனங்கள்
மாறிவிடுகின்றன என்ற உண்மையையும் நாம் மறந்து விடுவதற்கில்லை.
என்னென்ன விஷயங்கள் எல்லாமோ, நம் கண்முன் கொண்டு வந்து
நிறுத்தப்படுகின்றன; நமது காதுகளில் ரீங்காரம் செய்து கொண்டிருக்கும்படி
ஆக்கப்பட்டிருக்கின்றன. நேரான வழியையும் இச்சாதனங்கள் காட்டலாம்; தவறான பாதையிலும்
மக்களை திசைத் திருப்பி விடவும் செய்யலாம்.
ஆங்கிலத்திலும் தமிழிலும் பிரசுரமாகியுள்ள மொழி
பெயர்ப்பு நூல்கள் வாயிலாகத் திருக்குர்ஆனின் கருத்துக்களை ஓரளவு தெரிந்துக்கொள்ள
முடிந்த என் போன்றோருக்கு, தினசரி பத்திரிகைகளையும், எலெக்ட்ரானிக் மீடியா மூலம்
பரப்பப்படும் செய்திகளையும் அன்றாடம் எதிர்நோக்கும் பொழுது, எங்கள் உள்ளங்களில்
பலப்பல சிந்தனைகள் எழுகின்றன; உணர்ச்சிகள் தூண்டி விடப்படுகின்றன. மயக்கமும்
ஏற்படுகிறது, அதே சமயம் தெளிவும் பிறக்கிறது.
திருக்குர்ஆன் வசனங்கள் நம் நினைவுக்கு வரும்
சமயம், வெளிச்சம் பளிச்சிடுகிறது. சீரான
வழி தென்படுகிறது; குழப்புபவர்களைக் கண்டு நாம் உஷாராகிக்கொள்ள திருமறை துணை
செய்கிறது. உண்மைகள் எடுத்து வைக்கப்படும் பொழுது, திருமறை வசனங்கள் அவற்றை
ஊர்ஜிதம் செய்யும் பொழுது, நமக்கு ஒரு தெம்பு பிறக்கிறது. தைரியம் உண்டாகிறது.
நாம் பின்பற்றும் நேரான வழியில் இன்னமும் பூணிப்பாகவும் உற்சாகமாகவும் செயல்பட
வேண்டும் என்ற மனப்பக்குவம் தானாகவே உதயமாகி விடுகிறது.
மனித குலத்தின் ஆசான்
இறைவனே. நபிமார்கள் மூலமாக மனித இனத்திற்கு நேரான வழியை ஆண்டவன் காலமெல்லாம்
காட்டி வந்துள்ளான். தீர்க்கதரிசிகளின் சொற்படி நடந்து கொண்டவர்கள் கதி மோட்சம்
அடைந்தனர்; வரம்பு மீறி நடந்து கொண்டவர்களும் அக்கிரமங்கள் புரிந்தோரும் அதற்குரிய
தண்டனையை சந்திக்கவே செய்தனர்.
நபிமார்களுக்கெல்லாம்
முத்திரை நபியாகவும் இறுதி நபியாகவும்
இவ்வுலகிற்கு அனுப்பப்பட்ட நமது நபிகள் திலகம் முஹம்மது (ஸல்) அவர்கள் மூலமாக
இறக்கப்பட்ட திருக்குர்ஆனே இறுதியான வேத நூலாகும். அந்த வேத வசனங்களை இன்றைய உலக
நடப்புகளின் பின்னணியில் உற்று நோக்கும் பொழுது, நமது சிந்தனைகளுக்கு நிறைய வேலை
கிடைக்கின்றன; எண்ணங்கள் சிறகடித்துப் பறக்கின்றன. சாதாரண அறிவு படைத்தவருக்கும்
அரபி மொழி அறிவு இல்லாதவருக்கும் மேற்சொன்ன அனுபவங்கள் ஏற்படத்தான் செய்கின்றன.
அப்படிப்பட்ட
அனுபவங்களையும் கருத்துச் சிதறல்களையும் மற்றவர்களுடனும் பகிர்ந்துக்கொள்ள
வேண்டும் என்ற உள்ளுணர்வு எனக்கு ஏற்பட்டதன் விளைவே இத்தொடர் கட்டுரைகள்
எழலாயிற்று.
1988 ஜனவரியில் இருந்து "திருக்குர்ஆன்
சிந்தனைகள்" என்ற தொடர் கட்டுரை "குர்ஆனின் குரல்" மாத
இதழில் ஆரம்பமானது. இறைவன் அருளால் 1992-ம் ஆண்டு ஆரம்பத்துடன் ஐம்பது மாதங்கள்
ஓடிவிட்டன. ஐம்பது கட்டுரைகள் பிரசுரமாகிவிட்டன. அல்ஹம்துலில்லாஹ்!
திருக்குர்ஆன் ஒரு
வேத நூல் என்றாலும், இதர நூல்களைப் போன்று இதையும் படிப்பதற்கில்லை. ஏதோ ஒரு கதையோ, கட்டுரையோ அல்லது நாவலோ படிப்பது
போல இதனையும் படித்துவிட முடியாது. தாமாகவே படித்து முழு விபரங்களையும் விளங்கிக்
கொள்ளலாம் என்பது சிரமசாத்தியமானதே.
நமக்குத் தெரிந்த
மொழியிலேயே அவற்றின் அர்த்தங்களை வாசித்தாலும், எடுத்த எடுப்பிலேயே வசனங்கள் அனைத்தும்
விளங்கி விடாது. தெரிந்தவர்களிடம் அவ்வப்போது விசாரித்து கொள்ள வேண்டும்.
விளங்கிக்கொள்ள முயற்சிக்க வேண்டும். சம்பந்தப்பட்ட வசனங்களின் பின்னணி என்ன? அந்த
வரலாறுகளின் முழு விபரங்கள் என்னென்ன? எந்த சந்தர்ப்பத்தில் எதற்காக இவ்வசனங்கள்
இறக்கப்பட்டன? என்பன போன்ற விளக்கங்களையும் வியாக்கியானங்களையும் கேட்டுத்
தெரிந்து கொள்ளும் பொழுதுதான் இறைவசனங்களை முழுமையாகப் புரிந்து கொள்ள முடியும்.
ஒரு விஷயத்தைப்
பற்றிய வசனங்களைப் படித்துக் கொண்டிருக்கும் பொழுதே மற்றொரு விஷயத்திற்கு வசனங்கள்
தாவிவிடும். திடீர்திடீரென பொருள்கள்t மாறிவிடும். மாறிக்கொண்டே இருக்கும்.
சொல்லப்பட்ட விஷயங்களே திரும்பத் திரும்ப வந்துக் கொண்டிருக்கும். ஒரு சாதாரண
வாசகன் சரளமாகப் படித்துச் செல்லும் விதத்தில் திருமறை வசனங்கள் அமைந்திராது.
எடுத்த எடுப்பில் இவையெல்லாம் அவனுக்கு ஒரு புதிராகவே தோன்றலாம்.
ஆனால், இவ்வேத
வசனங்களை திரும்பத் திரும்ப படிக்கும் பொழுது, அவற்றின் பின்னணியை முறையாகவும் சரிவரவும் தெரிந்துகொள்ளும் பொழுது, அந்த வசனங்களில் பொதிந்து
கிடக்கும் மறைந்து கிடக்கும் கருவூலங்களை ஒருவன் விளங்கிக் கொள்வது
சாத்தியமாகலாம்.
ஒவ்வொரு முறை
படிக்கும் பொழுதும், அதே வசனங்களுக்கு புதுப்புது அர்த்தங்கள் தோன்றலாம்; புதிய
கோணங்களில் இருந்து சிந்திக்க வாய்ப்புகள் கிடைத்துக் கொண்டே இருக்கும். அன்றையப்
பத்திரிகையைப் படித்துவிட்டு திருமறையின் ஒரு அத்தியாயத்தை வாசிக்கும் பொழுது நமது
உள்ளத்தில் என்னென்ன கருத்துக்கள் எல்லாமோ உதயமாகும். அதே அத்தியாயத்தை சில
தினங்கள் கழித்து மற்றொரு பின்னணியில் வாசிக்கும் பொழுது முற்றிலும் புதிய
கோணங்கள் காட்சி அளித்துக் கொண்டிருக்கும்; ஞானங்கள் உதயமாகிக் கொண்டிருக்கும்.
இதுவே இந்த வேதத்தின்
மகிமை, சிறப்பு; தனித்தன்மை. திரும்பத் திரும்ப வாசிக்குந் தோறும் இம்மறையில்
ஈடுபாடு அதிகரித்துக்கொண்டே செல்லும். அலுப்புத் தட்டாது. சலிப்பு ஏற்படாது.
திரும்பத் திரும்ப படிப்பதனால் "போர்" அடிக்காது. ஆழமான விஷயங்கள்
தாமாகவே உதயமாகலாம். அவரவர் தகுதிக்கும் அறிவுக்கும் தகுந்தவாறு இவ்வேதம் சிந்தனா
விருந்தாக அமைகிறது. இதில் கிஞ்சிற்றும் சந்தேகமேயில்லை.
பலப்பல கருத்துக்கள்
இலைமறை காயாக சில வசனங்களில் மறைந்துக் கிடக்கின்றன. திரும்பத் திரும்ப படிக்கும்
பொழுதுதான் அதன் உண்மைப் பொருள் நமது அறிவுக்குள் அடக்கமாகும்; அப்பொழுதுதான்
தெரியும், புரியும் அப்பொழுதுதான் வேத நூலை ரசிக்கவும் முடியும். அது ஒரு பெரிய
பொக்கிஷம்; கஜானா; அள்ள அள்ள வந்து கொண்டே இருக்கும் ஊற்றுப் போல, திரும்பத்
திரும்ப, படிக்கப் படிக்க நமது சிந்தனைகளுக்கு "விஷயங்கள்" கிடைத்துக்
கொண்டே இருக்கின்றன. அவரவர் ஆற்றலுக்கேற்ப "விருந்து" நிச்சயம் உண்டு.
இவற்றையெல்லாம் விவாதித்து தெரிந்துக் கொள்ள முடியாது. அவரவர் அனுபவித்து,
ரசித்துப் புரிந்து இன்பம் காண வேண்டிய சங்கதி.
திருக்குர்ஆனின்
அர்த்தங்களைத் தெரிந்து நாம் அறிவு பெறுவதும் உணர்ச்சி பெறுவதும் ஒருபுறம்
இருக்கட்டும். திருக்குர்ஆன் என்றாலே என்ன என்பதனை அறியாத ஒருவன் முன்பு, அதை ஓதக்
கேட்டாலே ஒருவித காந்த சக்திக்குக் கட்டுப்பட்டது போன்று அவன் ஆகிவிடுகிறான்.
மெய்மறந்து வேதத்தின் நாதத்தைக் கேட்டுக்கொண்டே இருப்பான்.
மகுடிக்குக்
கட்டுப்பட்ட நாகம் போல, மனித இதயங்களை வேத வசனங்களின் உச்சரிப்புக்கள் கவர்ந்து
விடுகின்றன. அர்த்தமே தெரிய வேண்டியதில்லை. வேதத்தின் நாதத்திற்கே அந்த ஆகர்ஷன
ஷக்தி (கவர்ந்து இழுக்கும் தன்மை) வந்துவிடுகிறது. அதனால்தான் ஏகதெய்வப்
பிரச்சாரம் மக்கமா நகரில் ஆரம்பமான பொழுது, குறைஷிகள் காதுகளில் பஞ்சை வைத்து
அடைத்துக் கொண்டார்களாம்!
திருக்குர்ஆன்
வசனங்கள் தங்கள் காதுகளின் வழியாக அவர்களது உள்ளங்களைத் தொட்டுவிடக்கூடாது
என்பதற்காகவே இந்த உபாயம். மக்காவிற்கு வரும் வெளியூர்காரர்களையும் வேதத்தின் ஒலி
தாக்கி அவர்களையும் கவர்ந்து விடக்கூடாதே என்பதற்காக தற்காப்பு நடவடிக்கையாக, அவர்களது
காதுகளிலும் பஞ்சை வைத்து அடைத்துக் கொள்ளுமாறு காபிர்கள் புத்திமதி கூறுவதுண்டு.
இது வரலாறு.
மனிதர்களின்
உள்ளங்களை மட்டும் தூண்டிவிடக்கூடிய சக்தியை திருமறை வசனங்கள் பெற்றிருக்கவில்லை.
நெருப்பினால் படைக்கப்பட்ட ஜின் வர்க்கங்களையும் பாதிப்புக்கு உள்ளாக்கக்கூடிய ஆற்றல்
இந்த வேதத்திற்கு இருக்கிறது. ஜின்களிலும் ஈமான் கொண்ட கூட்டங்களும் உண்டு.
காபிர்களான ஜின்களும் உண்டு. நமது நாட்டில் பேய் பிசாசு என்று இங்குள்ள பிற
மதத்தினர் கூறிகொள்கிறார்களே. இவை அனைத்தும் இந்த காபிரான ஜின் வர்க்கங்களில்
அடங்கும்.
பேய் பிடித்திருப்பதாகக்
கருதப்படும் ஒருவரிடமிருந்து அப்பேயை விரட்டுவதற்காக மாந்தரீக முறைகள் இந்நாட்டில்
கையாளப்படுவதை நாம் அறிவோம். பலரும் நேரிலும் பார்த்திருக்கலாம். ஹிந்து மத
ஆச்சாரங்களின் பிரகாரம் பேயை விரட்ட பல சடங்குகளை அவர்கள் செய்வதுண்டு. ஆனால்
கெட்ட ஷைத்தான்களின் தொந்திரவுக்கு ஆளாக்கப்பட்ட மன நோயாளிகளை, இக்கலையில் தேர்ந்த
முஸ்லிம் வல்லுனர்களான “தங்கள்”மார்கள் ஓதிப்பார்ப்பதும் உண்டு.
திருக்குர்ஆன்
வசனங்களை பாதிக்கப்பட்டவர்கள் மீது ஓதி ஓதி ஊதுவது இச்சடங்குகளில் ஓர் அம்சம்.
பாதிக்கப்பட்ட நபர் முஸ்லிமாக இல்லாவிட்டாலும் கூட, பேய் பிசாசுகளின்
தொந்திரவுகளுக்கு அவன் ஆளாகி இருக்கும் பொழுது, திருக்குர்ஆன் வசனங்களை அவர்கள்
முன்னிலையில் உரக்க ஓதப்படும் பொழுது, அந்த பேய் பிசாசுகள் கூட, வேத நாதத்தின்
காந்த சக்திக்குமுன் நிற்க முடியாமல், திணறுவதையும் ஓலமிடுவதையும் அங்கலாய்த்துக்
கொள்வதையும் பலரும் நேரில் பார்த்திருக்கிறார்கள். பல உண்மைச் சம்பவங்களை சிலர்
வர்ணித்திருப்பதை நான் கேட்டிருக்கிறேன்.
பொதுவாகச் சொல்வதானால் படைப்பினங்கள் அனைத்தையும் கட்டுப்படுத்தக் கூடிய,
தூண்டக்கூடிய, உருவேற்றக்கூடிய மின் ஷக்தி இத்திருமறை வசனங்களுக்கு நிச்சயம்
உண்டு.
தங்களது பிந்தைய
காலத்தில் இஸ்லாமியக் குடியரசின் இரண்டாவது கலிபாவாகத் திகழ்ந்த ஹஜரத் உமரே பாருக்
அவர்கள், ஆரம்ப கட்டத்தில் நபிகள் திலகத்தைகொலை செய்ய வேண்டும் என்ற குறிக்கோளுடன்
உருவிய வாளுடன்தானே அன்னாரின் தங்குமிடம் நோக்கி புறப்பட்டார்கள். வழியில் ஒருவர்
உமர் அவர்களிடம் அவரது தங்கையும் மைத்துனரும் இஸ்லாத்தை தழுவிவிட்ட சேதியைத்
தெரிவிக்கவும், அந்த மாவீரன் திசைத் திருப்பப் படுகிறார்கள்.
தங்கை வீட்டின் எல்லையைத் தொட்டதும் அங்கு
நடந்ததென்ன? திருக்குர்ஆன் வசனங்கள் ஓதப்படுவதை அவர்கள் செவிமடுத்தார்கள். அவ்வளவுதான்!
உமர் பாரூக்கின் கோபம், தாபம், உத்வேகம், கொந்தளிப்புகள் எல்லாம் ஒரு நொடியில்
பறந்து விட்டன. காரணம் என்ன? இறைவனின் வார்த்தைகள் உமரின் உள்ளத்தைத்
தைத்துவிட்டன. அந்த வசனங்களின் அர்த்தத்தைப் புரிந்து கொள்ளும் ஆற்றலும்
அன்னாருக்கு இருந்தது சௌகரியமாக அமைந்துவிட்டது. அவர்களது தாய் மொழியில் வேதம்
ஓதப்பட்டதும் அதற்கு கைமேல் பலன் கிடைத்துவிட்டது.
ஆனால் ஒரு சிலரின்
நிலைமைகள் வேறு, அவர்களது தாய் மொழியில் இவ்வேதம் இருந்தபோதிலும் அதனை
ஏற்றுக்கொள்ளாத குறைஷிகளும் இருக்கத்தான் செய்தனர். உள்ளங்கள் திரையிடப்பட்ட
கூட்டத்தைச் சேர்ந்தவர்கள் அவர்கள்.
உலகம் முழுவதற்குமாக
ஊழிக்காலம் வரையிலும் நிலைத்து நிற்கக்கூடிய இந்த வேதம் 23 ஆண்டு இடைவெளிக்குள்
அருளப்பட்டது. நபிகள் திலகம் அவர்களது நாற்பதாவது வயதில் ஆரம்பமாகி
அதற்குப்பின்னர் அவர்கள் வாழ்ந்த 23 ஆண்டுகளுடன் அது முழுமை பெற்றுவிட்டது. நபிகள்
நாதர் காலத்திலேயே இவ்வேதம் நூலுருவம் பெறவில்லை. பெரும்பாலும் அதனை பலரும் மனனம்
செய்து கொண்டனர். ஒரு சிலர் சில வேத வசனங்களை துண்டு துண்டாக எழுதி வைத்துக்
கொள்ளவும் செய்தனர். மனப்பாடம் செய்து கொள்வதற்கு மிகவும் எளிமையானது இந்த வேதம்
என்று இறைவனே கூறியுள்ளான்.
கலிபா அபூபக்கர்
அவர்களது ஆட்சிக் காலத்தில் ஹிஜிரி பதினோராவது ஆண்டில் யமாமா போரின் போது
திருமறையை மனப்பாடம் செய்திருந்த ஹாபிஸ்கள் பலரும் மரணமடைந்த பின்னரே, இவ்வேதத்தை
நூல் வடிவம் ஆக்க வேண்டும் என்ற அவசரம் உச்சம் பெற்றது. கலிபா உதுமான் அவர்கள்
ஆட்சிக் காலத்தில் இம்முயற்சி பூர்த்தி பெற்றது. நூல்வடிவில் இறைவேதம் தொகுக்கப்
பெற்றது.
இதற்குக்கூட அந்தக்
காலத்தில் எதிர்ப்புகளும் ஆட்சேபனைகளும் இல்லாமல் இல்லை. நபிகள் (ஸல்) அவர்களே
தங்கள் ஆயுட்காலத்தில் மேற்கொள்ளாததொரு முயற்சியை அவர்கள் மறைவுக்குப் பின்னர்
மற்றவர்கள் மேற்கொள்ளுவது சரிதானா முறைதானா என்று வினவியர்களும் இருக்கத்தான்
செய்தனர். நல்லகாலம்; அந்த ஆட்சேபனைகள் எல்லாம் காலப்போக்கில் காற்றில் அடித்துச்
செல்லப்பட்டு விட்டன.
அரபி மொழியில் இருந்த
திருக்குர்ஆனை பிற மொழியில் மொழிபெயர்த்து எழுதும் பணிஆரம்பமான காலகட்டத்திலும்,
அதற்கும் எதிர்ப்புகள் கிளம்பாமல் இல்லை. பார்ஸி மொழியில்தான் முதல் மொழிபெயர்ப்பு
ஆரம்பமானது. அரபி மொழியின் மூலமாகவே மட்டும் இந்த வேத நூலைப் படித்து புரிந்து
கொள்ள வேண்டும் என்றும் வேற்று மொழியில் அவற்றை ஆக்கம் செய்யக் கூடாது என்றும்
அப்பொழுது தாவாக்கள் எழுப்பப்பட்டன. காலத்தின் கட்டாயத்தினால் அவை எடுபடவில்லை.
பல மொழிகளையும்
பேசும் மக்கள் கூட்டங்களுக்கு இந்த வேதம் துரிதமாகச் சென்றடைய வேண்டும் என்ற
நிர்பந்தமும் அவசரமும் உண்டாகிவிட்ட பின்னர் மொழிபெயர்ப்புகளின் வேகத்தை
கட்டுப்படுத்த இயலவில்லை. உலக மொழிகளில் எல்லாம் திருக்குர்ஆனின் மொழிபெயர்ப்புகள்
இன்று காணக்கிடைக்கின்றன.
இந்தியாவைப்
பொறுத்தவரை சுமார் இரண்டு நூற்றாண்டுகளுக்கு முன்னர்தான் உர்தூவில் மொழிபெயர்த்து எழுதினார்கள். அந்த நேரத்திலும்
கூட உர்தூ மொழியில் குர்ஆனை ஆக்கம் செய்யப்படும் முயற்சிக்கும் எதிர்ப்புகள்
எழுந்தன என்று அறிய முடிகிறது. இன்று இந்தியாவிலுள்ள பிரபலமான மொழிகள் அனைத்திலுமே
இந்த வேதத்தின் மொழிபெயர்ப்புகள் வெளிவந்துவிட்டன என்று கொள்ளலாம். தமிழ் மொழியில்
முதன் முதலில் அரபுத்தமிழ் லிபியில்தான் குர்ஆன் மொழிபெயர்ப்பு வெளியிடப்பட்டது.
பின் காலங்களில் தமிழ் எழுத்துக்களிலும் மொழிபெயர்ப்புகள் வெளிவரலாயின.
திருக்குர்ஆன் ஒரு
புரட்சிகரமான நூல். அன்றைய சமுதாயத்தின் சீர்கேடுகளை கடுமையாகச் சாடியது.
ஏற்றத்தாழ்வுகளை கண்டனம் செய்தது. அடிமைகளையும், ஏழை எளியவர்களையும், பெண்களையும்,
அனாதைகளையும், விதவைகளையும் வாழவைப்பதற்காக உருவானதே இந்த இறைவேதம். அன்று
மட்டுமல்ல; என்றென்றும் இந்தப் பாவப்பட்ட மக்களின் நலன் காக்க உண்டானதே இது. ஒரு
பெரிய சமுதாயப் புரட்சியை இவ்வேதம் செய்துகாட்டி விட்டது. இன்றும் செய்து காட்டிக்கொண்டிருக்கிறது.
உலகம் தோன்றியதில்
இருந்து எத்தனையோ வேதங்கள் இப்பூவுலகிற்கு அனுப்பப்பட்டிருக்கின்றன. ஆனால்
திருக்குர்ஆன் ஒரு தாய் வேதம் (உம்முல் கிதாப்). இருபத்தி மூன்று ஆண்டுகள் சிறுகச்
சிறுக அதை இறக்கி வைத்தான். அது ஒரு நல்லுபதேசம்; நேர்வழிகாட்டி; அச்சமூட்டி
எச்சரிக்கை செய்யும் நூல். எளிதாக அறிந்து கொள்ளும் பொருட்டு, திரும்பத் திரும்ப
விஷயங்கள் எடுத்துச் சொல்லப்படுகின்றன. ஞாபகமூட்டப்படுகின்றன. இது ஒரு கண்ணியமான
நூல் என்று ஆண்டவனே சாட்சி சொல்லி இருக்கிறான்.
திருக்குர்ஆனை ஒன்று
சேர்ப்பதும் அதை ஓதும்படிச் செய்வதும், விளக்குவதும், பாதுகாப்பதும் தன் பொறுப்பு
என இறைவனே பகிரங்கப்படுத்தியுள்ளான். இதைபோன்று ஒரு நூலைஉருவாக்கிப் பாருங்களேன்
என இந்த வேதம் அறைகூவல் விட்டுக்கொண்டிருக்கிறது. ஒரு நூல் என்ன? ஒரு அத்தியாயம்
என்ன? இதைப்போன்று பத்து வசனங்களை அல்லது ஒரு வசனத்தையாவது இயற்ற முயற்சித்துப்
பாருங்களேன் என்ற சவாலுக்கு இன்றுவரை பதில் இல்லை. கியாம நாள் வரும் வரை பதில் வராது.
இது நிச்சயம்.
திருக்குர்ஆனிலேயே
இந்நூலைப்பற்றி முப்பத்தைந்து விதமான அடைமொழிகளை அல்லாஹ் உபயோகப்படுத்தி
இருக்கிறான். இந்நூல் ஒளி என்று அழைக்கப்படுகிறது; சத்தியம் என பறை
சாற்றப்படுகிறது; ஞானம் நிறைந்தது, கண்ணியத்திற்குரியது, நிவாரணமளிப்பது, உறுதியானது,
உயிர் உள்ளது என பலப்பல சிறப்புகள். இதுதான் சட்டம்; இதுதான் வரலாறு; இதுதான்
உயர்வானது; ஆதாரமானது; ஏன்? ஆச்சரியமானதும் கூட. நன்மை தீமைகளை பிரித்தறிவிப்பது
இதுவே; இதுவே அல்லாஹ்வின் கயிறு. திருக்குர்ஆன் முழுமை பெற்றதுடன் சத்தியம்
பிறந்து விட்டது, பொய் அழிந்துவிட்டது. பொய் அழியக் கூடியது; அது அழிந்தே தீரும்.
திருக்குர்ஆனை ஒரு
கனமான, பளுவான, உறுதியான (Word of Weight) (73:5) என அல்லாஹ் வருணித்துள்ளான். சிறுகச் சிறுக அதை நாமே இறக்கி வைத்தோம்
(17:106) என்று பிரகடனம் செய்துள்ளான். அதை எளிதாக்கி இறக்கி இருக்கிறோம்
என்கிறான். இவ்வேதத்தை பாதுகாப்பது தமது பொறுப்பு (15:19) என்றும் சந்தேகத்திற்கு
இடமில்லாதவாறு கூறியுள்ளான். திருமறைக்கு விளக்கம் சொல்வதும் நம்மீது உள்ளது
(75:19) என்பது அவனது உறுதி மொழி.
இந்தப் பாதுகாப்புக்
காரணமாகவே இந்த வேதத்தில் இடைச் செருகல்கள் ஏற்படவில்லை. நுழைய முடியவில்லை; 1400 ஆண்டுகளாக ஒரு
எழுத்தைக் கூட அப்படி இப்படி என்று மாற்றி அமைக்க முடியவில்லை. யூத கிறித்தவ
அறிஞர்கள் பலரும் இத்துறையில் முயர்ச்சித்துத்தான் பார்த்தார்கள். அவை அனைத்தும்
விழலுக்கிரைத்த நீராகவே போய்விட்டது.
பாமரர் முதல்
படித்தவர்கள் வரை பழகக்கூடிய, கையாளக்கூடிய, அறிமுகம் செய்துக்கொள்ள வேண்டிய வேத
நூல் இத்திருமறை என்பது அனுபவப்பூர்வமாக ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளாக நிருபிக்கப்பட்டுள்ளது.
அவரவர் சக்திக்குத் தகுந்தவாறு, அறிவுக்கு எட்டியவாறு சிந்தனைத் திறனுக்கு
ஒத்தவாறு இவ்வேதத்தை புரிந்து கொள்வார்கள்; விளங்கிக் கொள்வார்கள்; பலன் அடைந்து
கொள்வார்கள்.
எளிதான இந்த வேதம்
பாமரர்களும் ஏழை எளியவர்களும் பலன்பெரும் பொருட்டு அவர்களுக்காகவே அனுப்பப்பட்டது
என்பது மிகப்பெரிய உண்மை. அதன் வசனங்கள் மட்டும் எளிதாக இருக்கவில்லை; அந்நூலை
அணுகுவதும் எளிது; புரிந்து கொள்வது சுலபமானது; விளங்காத புதிர் ஓன்றும் அதில்
இல்லை.
நான் அறிந்து கொண்டதை
வாசகர்களுடன் பகிந்து கொண்டிருக்கிறேன்; எனது சிற்றறிவுக்கு எட்டியதைத் துணிந்து
எழுதியுள்ளேன்; நான்
விளங்கிக் கொண்டது தவறாக இருக்கலாம்; அல்லது அரைகுறையாக இருக்கலாம்; விஷயம்
தெரிந்தவர்கள் சுட்டிக்காட்டினால் என்னைத் திருத்திக்கொள்ள நான் என்றும் தயாராகவே
இருக்கிறேன்.
எல்லாப் புகழும்
அல்லாஹ்வுக்கே!
௦03-05-1992 A.K. ரிபாயி
No comments:
Post a Comment